×

கட்சியை வழிநடத்த 11 பேர் கொண்ட குழு அமைக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமிக்கு செக் வைக்கும் ஓபிஎஸ்

சென்னை: கட்சியை வழி நடத்த 11 பேர் கொண்ட குழு அமைக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமிக்கு செக் வைக்கும் விதமாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். கூட்டம் தொடங்கியதும், அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் முதலில் பேசினார். ‘‘தோல்விக்கு அமைச்சர்கள் தான் காரணம். எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர், தொண்டர்களிடம் கருத்து கேட்டுதான் கூட்டணி அமைப்பார்கள். ஆனால், தற்போது அமைச்சர்கள் பேச்சை கேட்டுதான் கூட்டணி அமைக்கப்பட்டது. அதனால்தான் தோல்வி ஏற்பட்டுள்ளது.” என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது.

ஓ.பன்னீர்செல்வம் பேசும்போது, “2017ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் கட்சியை வழிநடத்த 15 பேர் கொண்ட ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர்கள் 2 பேர் என 4 பதவிகள் மட்டுமே ஏற்படுத்தப்பட்டுள்ளது. 11 உறுப்பினர்களை இன்னும் நியமிக்கவில்லை. அப்படி நியமித்திருந்தால், அவர்களும் நம்முடன் இணைந்து கட்சியை ஒருங்கிணைத்து வழிநடத்தி சென்றிருப்பார்கள். வேட்பாளர்கள் தேர்வு முதல் அனைத்து பணிகளையும் 11 பேர் கொண்ட கமிட்டிதான் முடிவு செய்ய வேண்டும். கட்சிக்குள் சில விரும்பத்தகாத பிரச்னைகள் ஏற்பட்டிருக்காது. அதனால் இன்னும் 15 நாளில் அந்த பதவிகளை உருவாக்க வேண்டும்” என்று பேசியதாக கூறப்படுகிறது.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசும்போது, “கட்சியின் முன்னணி தலைவர்களிடம் ஆலோசனை நடத்தித்தான் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டனர். அதேபோன்று கூட்டணியும் அமைக்கப்பட்டது. ஆனாலும், எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. அதிமுக கட்சியை பொறுத்தவரை, யாரும் தலைவர்கள் இல்லை, அனைவரும் தொண்டர்கள்தான். அதனால் இரட்டை தலைமை, ஒற்றை தலைமை பற்றி யாரும் கருத்து தெரிவிக்க வேண்டாம். அதிமுக தோல்விக்கான காரணம் குறித்து அந்தந்த மாவட்ட செயலாளர்கள், எம்எல்ஏக்கள் கட்சி தலைமைக்கு அறிக்கையாக அளிக்க வேண்டும். இந்த கூட்டத்தில் எம்எல்ஏக்கள், மாவட்ட செயலாளர்கள் யாரும் பேச அனுமதிக்கப்பட மாட்டார்கள். அப்படி அனுமதித்தால் தேவையில்லாத பிரச்னைகள் ஏற்படும். அதனால், உங்கள் கருத்துக்களை மனுவாக கட்சி தலைமைக்கு அளித்தால் உங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றி தரப்படும்” என்று பேசியதாக கூறப்படுகிறது. கட்சியை வழி நடத்த தற்போது 4 பேர் மட்டுமே உள்ளனர். மேலும் 11 பேரை போட்டால், கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளராக இருக்கும் எடப்பாடி தன்னிச்சையாக முடிவு எடுக்க முடியாமல் கூட்டு முடிவு எடுக்க வழி வகுக்கும் என்பதற்காகவே, எடப்பாடிக்கு செக் வைப்பதற்காக  ஓ.பன்னீர்செல்வம் பேசியதாக அதிமுக நிர்வாகிகள் கருதுவதாக கூறப்படுகிறது.

Tags : group ,party , Edattadi Palaniasamy, OBS
× RELATED ஐபோன்களுக்கான கேமரா தயாரிக்க...