டெல்லி சென்று உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்த நிலையில் தமிழக கவர்னருடன் முதல்வர் எடப்பாடி திடீர் சந்திப்பு

சென்னை: தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் டெல்லி சென்று உள்துறை அமைச்சர் அமித்ஷாைவ சந்தித்துவிட்டு திரும்பியுள்ள நிலையில், முதல்வர் எடப்பாடி தமிழக கவர்னரை நேற்று மாலை திடீரென சந்தித்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் கடந்த திங்கட்கிழமை (10ம் தேதி) டெல்லி சென்றார். அங்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையாநாயுடு, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் சந்தித்தார். தமிழகத்தில், ஆளும் அதிமுக அரசுக்கு ஆதரவாக உள்ள எம்எல்ஏக்கள், கட்சியை வழிநடத்த ஒற்றை தலைமைதான் வேண்டும் என்று திடீர் போர்க்கொடி தூக்கினர்.

இதனால், அதிமுக ஆட்சிக்கு ஆபத்து ஏற்படலாம் என்ற ஒரு பரபரப்பான சூழ்நிலையில், தமிழக கவர்னர் டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்தது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது. டெல்லி பயணத்தை முடித்துக் கொண்டு கவர்னர் நேற்று முன்தினம் சென்னை வந்தார்.இந்த பரபரப்பான சூழ்நிலையில், அதிமுக தலைமை கழக நிர்வாகிகள், எம்பி, எம்எல்ஏக்கள், மாவட்ட செயலாளர்கள் கூட்டம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட விஷயங்கள் குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியிடப்படவில்லை. கூட்டம் முடிந்ததும் நேற்று மாலை 5 மணிக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சென்னை, கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு சென்று தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து பேசினார். அப்போது தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உடன் இருந்தார். இந்த சந்திப்பு சுமார் 30 நிமிடம் நடைபெற்றது.

இதுகுறித்து தலைமை செயலக உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, “தமிழக தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் இந்த மாதம் 30ம் தேதியுடன் ஓய்வு பெறுகிறார். இதனால் புதிய தலைமை செயலாளரை நியமிப்பது அல்லது அவருக்கு பணி நீட்டிப்பு வழங்குவது குறித்து கவர்னருடன் முதல்வர் ஆலோசனை நடத்தினார். மேலும், தமிழக டிஜிபியின் பணி நீட்டிப்பும் முடிவடைய உள்ளது. இதுகுறித்தும் விவாதிக்கப்பட்டது. அடுத்து தமிழக அமைச்சரவையில் முடிவு செய்தபடி, நளினி, முருகன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை குறித்த அறிவிப்பை தமிழக கவர்னர்தான் வெளியிட வேண்டும். இதுபற்றி அவர் இரண்டு நாட்களுக்கு முன் டெல்லி சென்றபோது உள்துறை அமைச்சருடன் விவாதித்திருக்கலாம். அதுபற்றிய தகவல் பரிமாறப்பட்டிருக்கும். தமிழக அரசு சம்பந்தப்பட்ட பிரச்னையை தவிர்த்து, தமிழக அரசியல் குறித்தும் தமிழக கவர்னரும், முதல்வரும் விவாதித்துள்ளனர். காரணம், தமிழகத்தில் தற்போது அதிமுக எம்எல்ஏக்கள் கட்சி தலைமை மீது அதிருப்தியில் உள்ளனர். இதுபற்றி கவர்னர், டெல்லியில் தகவல் தெரிவித்திருப்பார். இதற்கு டெல்லி தலைவர்கள் என்ன பதில் அளித்தனர் என்பது குறித்து இருவரும் பேசி இருக்க வாய்ப்புள்ளது. மேலும், டெல்லியில் 15ம் தேதி நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க முதல்வர் நாளை டெல்லி செல்கிறார். அதற்கு முன்னதாக தமிழக கவர்னரிடம் டெல்லி தகவல்களை கேட்டு தெரிந்து கொள்ள ஆளுநர் மாளிகைக்கு முதல்வர் சென்றிருக்கலாம்” என்றார்.

Related Stories:

>