×

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி பணியாளர் தேர்வில் முறைகேடு: 298 பேர் சிபிஐ கோர்ட்டில் ஆஜர்

சென்னை: இந்தியன் ஓவர்சீஸ் வங்கி பணியாளர் தேர்வில் முறைகேடு நடந்த விவகாரம் தொடர்பாக, சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் 298 பேர் நேரில் ஆஜராகினர். இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் துப்புரவு பணி மற்றும் தபால் பிரிவில் தற்காலிகமாக பலர் வேலை செய்து வந்தனர். இந்நிலையில், நிரந்தரமாக பணியமர்த்த இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி, கடந்த 2013-15ம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் தமிழகம் முழுவதும் 900 பேர் நியமனம் செய்யப்பட்டனர். இந்த பணிக்கு 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களும், எஸ்.எஸ்.எல்.சி.யில் தோல்வி அடைந்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது. இருந்தபோதிலும் அதிகமாக படித்த பலர் போலியாக கல்வி சான்றிதழ்களை சமர்ப்பித்து பணியில் சேர்ந்ததும், இதற்கு வங்கி அதிகாரிகள், தொழிற்சங்க நிர்வாகிகள், பள்ளி தலைமை ஆசிரியர்களும் பணம் வாங்கிக் கொண்டு உடந்தையாக இருந்ததும் சி.பி.ஐ.க்கு தெரியவந்தது. இதுதொடர்பாக சி.பி.ஐ., வங்கியின் அப்போதைய தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் நரேந்திரா, தொழிற்சங்க தலைவர் பாலசுப்பிரமணியன், போலி கல்வி சான்றிதழ் வழங்கிய 4 ஆசிரியர்கள், போலி கல்வி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்தவர்கள் என மொத்தம் 446 பேர் மீது வழக்குப்பதிவு செய்தது.

இந்த வழக்கு சென்னை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள சிபிஐ நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. நீதிபதி ஜவஹர் முன்பு அரசு வழக்கறிஞர் தினகரன் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தார். இதனைதொடர்ந்து அனைவருக்கும் சம்மன் அனுப்பப்பட்டது. அதன்படி கடந்த ஏப்ரல் மாதம் 424 பேர் நீதிமன்றத்தில் ஆஜராகினர். அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி வழக்கு விசாரணையை தள்ளிவைத்திருந்தார். இந்நிலையில் வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது குற்றம்சாட்டப்பட்ட ஊழியர்கள், ஆசிரியர்கள், அதிகாரிகள் என 298 பேர் நேரில் ஆஜராகினர். அவர்களிடம் விசாரணை நடத்திய நீதிபதி, வழக்கு விசாரணையை வரும் ஆகஸ்ட் 9ம் தேதிக்கு தள்ளிவைத்தார். ஒரே நேரத்தில் இத்தனை பேர் நீதிமன்றத்தில் ஆஜரானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags : persons ,Indian Overseas bank ,CBI , Indian Overseas Bank, Employee Selection, CBI Court
× RELATED ரூ.2.14 கோடி மோசடி ஐஓபி வங்கி மேலாளருக்கு...