×

ஷாங்காய் மாநாட்டிற்கு செல்ல பாக். வான்வெளியை தவிர்த்தார் மோடி: ஓமன், ஈரான் வழியாக சுற்றிப் பறந்தார்

புதுடெல்லி: கிர்கிஸ்தானில் நடக்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் (எஸ்சிஓ) பங்கேற்க தனி விமானத்தில் சென்ற பிரதமர் மோடி, பாகிஸ்தான் அனுமதி அளித்த போதும் அதன் வான்வெளியை பயன்படுத்துவதை தவிர்த்தார்.  ஓமன், ஈராக், மத்திய ஆசிய நாடுகள் வழியாக சுற்றிப் பறந்தார்.இந்தியா, சீனா, ரஷ்யா, பாகிஸ்தான், கிர்கிஸ்தான், கஜகஸ்தான், தஜிகிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய 8 நாடுகளை உள்ளடக்கிய ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடு. கிர்கிஸ்தான் நாட்டின் தலைநகர் பிஷ்கெக்கில் இன்றும்,  நாளையும் நடக்கிறது. இம்மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடியின் விமானம், பாகிஸ்தான் வான்வெளியை பயன்படுத்திக் கொள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் பாகிஸ்தானிடம் அனுமதி கோரியது.பாலகோட் தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியாவிலிருந்து வரும் விமானங்கள் பாகிஸ்தான் வான்வெளியில் பறக்க அந்நாடு தடை விதித்துள்ளது. இதனால், சிறப்பு அனுமதி பெற்றே இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான்வெளியை பயன்படுத்த  முடியும். கிர்கிஸ்தானுக்கு பாகிஸ்தான் வழியாக சென்றால் 4 மணி நேரத்தில் சென்று விடலாம். மாற்று பாதையில் சென்றால், பல்வேறு நாடுகளை சுற்றிக் கொண்டு 8 மணி நேரம் பயணம் மேற்கொள்ள வேண்டும். இதனாலேயே  பாகிஸ்தானிடம் அனுமதி கேட்கப்பட்டது.

இந்தியாவின் கோரிக்கையை ஏற்ற பாகிஸ்தான், பிரதமர் மோடியின் விமானத்திற்கு சிறப்பு அனுமதி வழங்குவதாக நேற்று முன்தினம் தெரிவித்தது. இது கொள்கை ரீதியாக எடுக்கப்பட்ட முடிவு என பாகிஸ்தான் கூறினாலும், இதன் பிறகாவது  மீண்டும் அமைதி பேச்சுவார்த்தையை முன்னெடுக்க இந்தியா முன்வர வேண்டுமென அழைப்பு விடுத்தது.இந்நிலையில், பிரதமர் மோடி, பாகிஸ்தானின் அனுமதியை கடைசி நேரத்தில் புறக்கணித்தார். பிரதமரின் பயண விவரம் குறித்து செய்தியாளர்கள் வெளியுறவுத்துறை செயலாளர் ரவீஸ் குமாரிடம் நேற்று காலை கேட்ட போது, ‘‘பிஷ்கெக்  நாட்டிற்கு விவிஐபி விமானங்கள் பறக்க 2 வழிகள் உள்ளன. இதில், பிரதமரின் விமானம் ஓமன், ஈரான் மற்றும் மத்திய ஆசிய நாடுகள் வழியாக பிஷ்கெக் செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது’’ என்றார்.

அதன்படி, டெல்லியிலிருந்து நேற்று புறப்பட்ட பிரதமர் மோடி, பாகிஸ்தான் வான்வெளியை தவிர்த்து விட்டு, ஓமன், ஈரான் வழியாக சுற்றுப் பறந்தார். எஸ்சிஓ மாநாட்டில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானும் பங்கேற்க உள்ளார். ஆனால்,  மோடி-இம்ரான் சந்திப்பு குறித்து எந்த திட்டமும் இல்லை என இந்தியா தரப்பில் திட்டவட்டமாக கூறப்பட்டுள்ளது குறிப்பிடப்பட்டது.


ஜின்பிங், புடினுடன் சந்திப்பு
எஸ்சிஓ மாநாட்டின் இடையே பிரதமர் மோடி, உறுப்பு நாடுகளின் தலைவர்களை சந்தித்து பேச இருக்கிறார். இதன்படி அவர் சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை சந்திக்கிறார். இதில் இரு தரப்பு உறவுகள், ராணுவ  ஒத்துழைப்பு குறித்த ஆலோசனைகள் இடம் பெறும் என கூறப்படுகிறது. மேலும், அமெரிக்கா-சீனா இடையே வர்த்தக போர் முற்றியுள்ள நிலையில், எஸ்சிஓ மாநாடு நடப்பதால் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இம்மாநாட்டில், வர்த்தக போரை எதிர்கொள்வது தொடர்பாகவும் எஸ்சிஓ நாடுகள் ஆலோசனை நடத்த  உள்ளன.



Tags : Pak ,airspace ,Shanghai Conference Modi ,Iran ,Oman , Pak. Modi,Oman, traveled ,Iran
× RELATED ஆப்கானில் பாக். குண்டு மழை 8 பேர் பலி