×

தமிழக அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் ராசிமணலில் அணை கட்டும் பணியை தொடங்குவோம்.

* விவசாயிகள் அறிவிப்பு * கல்வெட்டு திறந்தனர்

பென்னாகரம்: காவிரியின் குறுக்கே, ராசிமணலில் புதிய அணை கட்டும் பணியை தமிழக அரசு மேற்கொள்ளாவிட்டால், விவசாயிகளை ஒன்று திரட்டி அணை கட்டுமான பணிகள் தொடங்கப்படும் என தெரிவித்த தமிழக விவசாயிகள்,  அதற்கான கல்வெட்டை நேற்று திறந்து வைத்தனர்.தர்மபுரி மாவட்டம், ஒகேனக்கல்லில் இருந்து 18 கிமீ தொலைவில் உள்ள ராசி மணலில், அணை கட்டினால், சுமார் 100 டிஎம்சி தண்ணீர் தேக்கி வைக்க முடியும். இதனால், காவிரி டெல்டா விவசாயிகள் பெரிதும் பயனடைவார்கள் என்பதால்,  காமராஜர் ஆட்சிக்காலத்திலேயே இங்கு அணை கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. ஆனால், நிதி நெருக்கடி காரணமாக, அது கிடப்பில் போடப்பட்டது. தற்போது, மேகதாது பகுதியில் புதிதாக அணை கட்டும் பணியில், கர்நாடக அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இந்த அணை கட்டப்பட்டால், தமிழகத்தில் டெல்டா சாகுபடி வெகுவாக பாதிக்கும் என்பதால், மேகதாதுவில் இருந்து 42 கிமீ  தொலைவில், தமிழக எல்லையில் அமைந்துள்ள ராசிமணல் பகுதியில், தமிழக அரசு புதிய அணை கட்ட வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

காவிரிக்கு மாற்று காவிரியே என்ற முழக்கத்துடன், ராசிமணலில் அணை கட்டியே தீருவது என்ற முனைப்பில் விவசாயிகள் உள்ளனர். மேலும், டெல்டா பாசனத்திற்கு அணை திறக்கப்படும் நாளான ஜூன் 12ம் தேதி (நேற்று) ராசிமணலில்  அணை கட்டுவதற்கான கல்வெட்டு திறக்க முடிவு செய்தனர். இதை முன்னிட்டு, கடந்த 10ம் தேதி, நாகை மாவட்டம் பூம்புகாரில் இருந்து செங்கற்களை எடுத்துக் கொண்டு, திருவாரூர், நீடாமங்கலம், தஞ்சாவூர் வழியாக, நேற்று ஒகேனக்கல்லுக்கு 200க்கும் மேற்பட்ட விவசாயிகள், காவிரி விவசாயிகள்  சங்க பொதுச்செயலாளர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் வாகன பேரணியாக வந்தனர். பின்னர், ராசிமணலில் அந்த கல்வெட்டை திறந்து வைத்து, அணை கட்டுவதற்காக கொண்டு வரப்பட்ட செங்கற்களை, அஞ்செட்டி தாசில்தார்  செந்தில்குமாரிடம் ஒப்படைத்தனர். முன்னதாக, ராசிமணலில் அணை கட்டுவதற்கு, காமராஜர் ஒகேனக்கல்லில் நாட்டிய மாதிரி கல்வெட்டுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

பின்னர், பி.ஆர்.பாண்டியன் கூறியதாவது:மேகதாதுவில் அணை கட்டும் பணியை மத்திய அரசு உடனடியாக தடுத்து நிறுத்தி, ராசிமணலில் அணை கட்டி தண்ணீரை தேக்கி வைக்க அனுமதி வழங்க வேண்டும். தமிழகம் ஒன்றுபட்டு, அணை கட்டுமான பணிகளை காலதாமதமின்றி  தொடங்க வேண்டும். இதை அரசு தவிர்க்கும் பட்சத்தில், மக்கள் மற்றும் விவசாயிகளை ஒன்று திரட்டி, அணை கட்டுமான பணிகளை நாங்களே துவங்குவோம். இந்த கோரிக்கையை வலியுறுத்தி, அடுத்த கட்டமாக ஜூலை மாத இறுதிக்குள்,  நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறுவதற்குள்ளாக, டெல்லி மாநகரில் மாபெரும் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும்.  இவ்வாறு அவர் கூறினார்.



Tags : Tamilnadu ,government ,dam , Tamil Nadu,construction , Rasimanal.
× RELATED ஆன்லைன் சூதாட்டம் பற்றி...