ராஜராஜ சோழன் குறித்து சர்ச்சை பேச்சு இயக்குநர் ரஞ்சித் முன்ஜாமீன் மனு

மதுரை: தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே திருப்பனந்தாளில் கடந்த 5ம் தேதி இரவு நடந்த பொதுக்கூட்டத்தில் திரைப்பட இயக்குநர் ரஞ்சித், மன்னர் ராஜராஜசோழன் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். இதற்கு  பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதைத்தொடர்ந்து ரஞ்சித் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திருவிடை மருதூர் டிஎஸ்பியிடம் புகார் அளிக்கப்பட்டது. அதன்படி திருப்பனந்தாள் போலீசார் 2 பிரிவுகளின் கீழ் ரஞ்சித் மீது  வழக்குப்பதிவு செய்துள்ளனர்.இந்நிலையில் ஐகோர்ட் மதுரை கிளையில் நேற்று காலை நீதிபதி பி.ராஜமாணிக்கம் வழக்குகளை விசாரிக்க துவங்கினார். அப்போது வக்கீல் தாளைமுத்தரசு ஆஜராகி, ‘‘இயக்குநர் ரஞ்சித்துக்கு முன்ஜாமீன் கோரி மனு செய்கிறோம். அதை அவசர வழக்காக இன்றே(நேற்று) விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும்’’ என்றார். இதை கேட்ட நீதிபதி, ‘‘நீங்கள்  மனுவாக தாக்கல் செய்தால், நாளை(இன்று) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்’’ என்றார்.

இதையடுத்து இயக்குநர் ரஞ்சித் தரப்பில் முன்ஜாமீன் கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்யப்பட்டுள்ளது. அதில், புத்தகங்கள் மற்றும் வரலாற்று ஆய்வுகள் அடிப்படையிலேயே நான் பேசினேன். இதற்கு முன் இந்த கருத்தை பலரும் பேசியுள்ளனர். எந்த சமூகத்திற்கும் எதிராக நான் பேசவில்லை. எனவே, எனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும் என  இயக்குநர் ரஞ்சித் கூறியுள்ளார். இந்த மனு இன்று விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.ஆர்ப்பாட்டம்: இந்நிலையில், சேலத்தில் அகில பாரத இந்து மகா சபை சார்பில் இயக்குநர் ரஞ்சித்தை கண்டித்து நேற்று கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில தலைவர் ராஜசேகரன் தலைமை வகித்தார். இதில், ராஜராஜ  சோழன் பற்றி தவறான கருத்துக்களை வெளியிட்ட திரைப்பட இயக்குநர் ரஞ்சித்தை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

Related Stories: