×

சேலம் மாவட்டத்தில் 30 மலை கிராமங்களில் அதிரடி சோதனை

சேலம்: சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே பெரியகுட்டமடுவு வனப்பகுதியில் கடந்த 20 நாட்களுக்கு முன்பு துப்பாக்கி தொழிற்சாலை கண்டுபிடிக்கப்பட்டது. அங்கு துப்பாக்கி தயாரிப்புக்கான இயந்திரங்கள், உபகரணங்கள்,   அடிக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதனை வனத்துறையினர் நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.  இதுகுறித்து வாழப்பாடி போலீசாரும் விசாரித்து வந்த நிலையில், துப்பாக்கி தயாரித்து வந்த குடிசையை மர்ம ஆசாமிகள் தீ வைத்து எரித்தனர். தகவலின் பேரில் சேலம் மாவட்ட எஸ்.பி தீபா கனிக்கர், கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த  இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.இந்நிலையில் கருமந்துறை போலீஸ் ஸ்டேசன் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கள்ளத்துப்பாக்கி வேட்டை நடத்த,  3 தனிப்படை அமைக்கப்பட்டது. வனத்துறையினர், வருவாய்துறையினர் என அனைவரையும் ஒருங்கிணைத்த எஸ்.பி, நேற்று  அதிகாலை 5.30 மணிக்கு 30க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களில் அதிரடி வேட்டை நடத்தினார். இதில் 70 போலீசார் ஈடுபட்டனர்.

ஈச்சங்காட்டில் இருந்து கருமந்துறை வழியாக ஒரு குழுவும், தேக்கம்பட்டி வழியாக ஒரு குழுவும், வெங்காயகுறிச்சி வழியாக ஒரு குழுவும் என 3 குழுவினர் தேடுதல் வேட்டையை துவங்கினர். வீடுவீடாக சென்று நடத்திய சோதனையில்  முட்புதரில் பதுக்கி வைத்திருந்த 3 கள்ளத்துப்பாக்கி மீட்கப்பட்டது. கிராம மக்கள் மத்தியில் எஸ்.பி. தீபா கனிக்கர் கூறும்போது, அனுமதி இல்லாமல் துப்பாக்கி தயாரிப்பதோ, வைத்திருப்பதோ கூடாது. அரசின் அனுமதி பெற்று துப்பாக்கி வைத்துக்  கொள்ளலாம். அனுமதி இல்லாமல் துப்பாக்கி வைத்திருந்தால் போலீசிடம் ஒப்படைத்து விடுங்கள். உங்கள் மீது வழக்கு பதிவு செய்யமாட்டோம். நடவடிக்கை எடுத்துவிடுவோம் என பயந்தால், கோயிலில் வைத்துவிட்டு செல்லுங்கள். அதையும்  தாண்டி துப்பாக்கி வைத்திருந்ததை நாங்கள் கண்டுபிடித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல் யாராவது கள்ளச்சாராயம் தயாரித்தால் எங்களுக்கு தெரியப்படுத்துங்கள்’’ என்றார். அதிகாலை துவங்கிய இந்த சோதனை காலை 9 மணி  வரை நீடித்தது. போலீசாரின் தொடர் சோதனையால் அனைத்து மலைகிராமங்களிலும் பரபரப்பான சூழல் நிலவியது.



Tags : Action test ,mountain villages ,Salem district , Salem district, 30 mountain, villages
× RELATED காதல் மனைவிக்கு தெரியாமல்...