ஸ்டெர்லைட்டுக்கு எதிரான வழக்குகள் விசாரணைக்கு ஏற்பு: உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கக்கோரி வேதாந்தா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கு நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், பவானி சுப்பராயன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாகவும், எதிராகவும் 40க்கும் மேற்பட்ட இடையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் எந்த மனுக்களை விசாரணைக்கு ஏற்பது என்பது தொடர்பான விசாரணை நடந்தது. ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக வைகோ, பேராசிரியை பாத்திமா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பிரமுகர், மக்கள் அதிகாரம் அமைப்பு போன்றவை இடையீட்டு மனுக்களை தாக்கல் செய்திருந்தன. ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக மக்கள் வாழ்வாதார பாதுகாப்பு இயக்கம், பல்வேறு தொழில் அமைப்புகள் மனுக்களை தாக்கல் செய்திருந்தன.

அப்போது, வேதாந்தா நிறுவனம் சார்பில் மூத்த வக்கீல் ஜி.மாசிலாமணி ஆஜராகி, இந்த வழக்கில் ஏராளமான இடையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இவற்றை தனித்தனியாக விசாரித்தால் வழக்கு விசாரணை நீண்டுகொண்டே போகும். கருத்துகேட்பு கூட்டத்தில் கலந்துகொண்டவர் என்ற காரணத்தை வைத்து மனு தாக்கல் செய்துள்ளனர். எனவே, இதுபோன்ற இடையீட்டு மனுக்களை விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளக்கூடாது என்று வாதிட்டார்.அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண் வாதிடும்போது, இந்திய அரசியலமைப்பின்படி ஆரோக்கியமான, சுகாதாரமான சூழலில் வாழ அனைவருக்கும் உரிமை உள்ளது. அதற்கான வாய்ப்பை அரசுதான் ஏற்படுத்தி தரவேண்டும். பாதிக்கப்பட்டவர்கள் நீதிமன்றத்திற்கு வருவதை அரசால் தடுக்க முடியாது. இந்த வழக்கு மக்களின் வாழ்வாதாரம் சம்பந்தப்பட்டது. அவர்களின் வாழ்க்கை தொடர்பானது. இந்த விஷயத்தில் நீதிமன்றமே முடிவெடுக்கலாம் என்று வாதிட்டார்.

இதையடுத்து, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆஜராகி, 2013க்கு முன் அரசின் நிலைப்பாடு நிறுவனத்திற்கு சாதகமாகவே இருந்தது. கடந்த ஆண்டு மே 22ம் தேதி நடந்த துப்பாக்கிசூடு சம்பவத்திற்கு பிறகு அரசின் நிலை மாறியுள்ளது. கடந்த 23 ஆண்டுகளாக இந்த ஆலையை எதிர்த்து சட்டப் போராட்டம் நடத்தி வருகிறேன்.  எனவே, இந்த வழக்கில் வேதாந்தா நிறுவனத்துக்கு எதிராக வாதிட தன்னையும் ஒரு இடையீட்டு மனுதாரராக சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று வாதிட்டார். ஆலையை மூட உத்தரவிடக்கோரி வழக்கு தொடர்ந்த பேராசிரியை பாத்திமா சார்பில் மூத்த வக்கீல் வைகை ஆஜராகி, தங்களையும் இந்த வழக்கில் சேர்க்க வேண்டும் என்று கோரினார். ஸ்டெர்லைட் ஆலை சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் பி.எஸ்.ராமன், மூத்த வக்கீல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் ஆகியோர் ஆஜராகி, இந்த வழக்கில் பலரை இடையீட்டு மனுதாரர்களாக இணைத்தால் வழக்கு விசாரணை காலதாமதமாகும் என்று வாதிட்டனர். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இந்த வழக்கில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மனுக்கள் தாக்கல் செய்திருந்த வைகோ, பாத்திமா உள்ளிட்டோரின் மனுக்களை விசாரணைக்கு ஏற்றனர். அதேநேரம், ஆலைக்கு ஆதரவாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை தள்ளுபடி செய்தனர். வழக்கு விசாரணையை வரும் 20ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

× RELATED தொழிலாளியை தாக்கிய 3 பேர் மீது வழக்கு