×

நெல்லை அரசு போக்குவரத்து கழகத்தில் 21 புதிய பஸ்கள் விரைவில் இயக்கம்: ஸ்மார்ட் சிட்டிக்கு 12 பேட்டரி பஸ்கள்

நெல்லை: நெல்லை அரசு போக்குவரத்து கழகத்தில் 21 புதிய பஸ்கள் பல்வேறு வழித்தடங்களில் விரைவில் இயக்கப்பட உள்ளன. நெல்லை மாநகராட்சி பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பேட்டரி பஸ்களும் இயக்க போக்குவரத்து கழகம் நடவடிக்கை எடுத்துள்ளது. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் பழைய பஸ்களுக்கு பதிலாக புதிய பஸ்கள் படிப்படியாக வழங்கப்பட்டு வருகிறது. இதனடிப்படையில் நெல்லை கோட்டத்திற்கு 21 புதிய பஸ்கள் கடந்த மார்ச் மாதம் ஒதுக்கீடு செய்யப்பட்டன. அப்போது மக்களவை தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்ததால் பஸ்கள் இயக்கப்படாமல் ஒரங்கட்டப்பட்டிருந்தன. இதுபோல் தமிழகம் முழுவதும் தேர்தல் நடத்தை விதி அமலில் இருந்த போது இயக்காமல் ஓரங்கட்டப்பட்ட பஸ்களை விரைந்து இயக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதில் நெல்லை கோட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 21 புதிய பஸ்கள் விரைவில் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதையொட்டி ஓரங்கட்டி நிறுத்தப்பட்ட பஸ்களை இயக்கும் நிலைக்கு கொண்டுவர தூசி தட்டி இயக்கத்துக்கு தயார்படுத்தும் பணி தாமிரபரணி பணிமனை உள்ளிட்ட பணிமனைகளில் நடந்து வருகிறது. வட்டார போக்குவரத்து அலுவலக வழித்தட அனுமதி உள்ளிட்ட பணிகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளன. மேலும் நெல்லை மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 12 பேட்டரி பஸ்களை இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், நெல்லையில் இருந்து சென்னை, மதுரை, கோவைக்கு குளிர்சாதன வசதி பஸ்களை இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் போக்குவரத்து கழக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Tags : Nellai State Transport Corporation , Nellai, state transport, new buses
× RELATED திருச்சி, தஞ்சை, கள்ளக்குறிச்சியில் விபத்து தம்பதி உள்பட 11 பேர் பலி