×

வாயு புயல் நிலவரத்தை மத்திய அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது: பிரதமர் மோடி ட்வீட்

புதுடெல்லி: குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் வாயு புயல் நிலவரத்தை மத்திய அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது என பிரதமர் மோடி தனது ட்வீட்டரில் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் மாநில அரசுகளுடன் தொடர்பு கொண்டு நிலைமையை கேட்டறிந்து வருகிறேன் எனவும் பதிவிட்டுள்ளார். தேவையான உதவிகளை வழங்க தேசிய பேரிடர் மீட்புப் படையினர் தயார் நிலையில் உள்ளனர் எனவும் குறிப்பிட்டுள்ளார். தென்மேற்கு பருவமழை கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா மாநிலங்களில் பெய்து வரும் நிலையில், அரபிக்கடலில் புயல் உருவாகி உள்ளது. அரபிக்கடலில் உருவாகி உள்ள வாயு புயல் வடக்கு நோக்கி மணிக்கு 18 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்வதாக கூறப்பட்டுள்ளது. வாயு புயல் அதிதீவிர புயலாக மாறி நாளை காலை குஜராத் மாநிலம் போர்பந்தர் - டையூ பகுதிகளுக்கு இடையே கரையை கடக்கும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மேலும் புயல் கரையை கடக்கும் போது காற்றின் வேகம் மணிக்கு 145 கி.மீ முதல் 170 கி.மீ வரை இருக்கக் கூடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. புயல் காரணமாக கேரளா, கர்நாடகம், மகாராஷ்ட்ரா, கோவா, குஜராத் ஆகிய மாநிலங்களில் மிக கன மழை பெய்யக்கூடுமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அரபிக் கடலில் உருவாகியுள்ள வாயு புயல், 24 - 48 மணி நேரத்தில், குஜராத்தின் சௌராஷ்டிரா மற்றும் கட்ஜ் பகுதிகளை ஒட்டி கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக, குஜராத் மாநிலத்தின் கடலோர பகுதி மக்கள் சுமார் 3 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டனர். பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள தேசிய பேரிடர் மீட்பு குழுக்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதையடுத்து கட்ச் பகுதி முதல் தெற்கு குஜராத் வரை உள்ள கடற்கரையை ஒட்டியுள்ள இடங்கள் ‘ஹை அலெர்ட்டில் வைக்கப்பட்டுள்ளன. மேலும் கடற்கரையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் இருக்கும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்றும் நாளையும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல, தென்மேற்குப் பருவமழை கேரளாவில் நேற்று முன்தினம் தொடங்கியது. கேரளா மட்டுமின்றி, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. தொடர் மழையால் பல்வேறு தாழ்வான பகுதிகளில் மழை நீர் புகுந்ததால் மக்கள் கடும் சிரமத்திற்குள்ளாக்கப்பட்டனர். மேலும், வாயு புயலால் அடுத்த இரண்டு நாட்களுக்கு கோவா மற்றும் கோங்கன் பகுதிகளில் கனமழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், வாயு புயல் நிலவரத்தை மத்திய அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது என்றும், இது தொடர்பான தகவல்கள் குறித்து அந்த மாநில அரசுடன் தொடர்புகொண்டு நிலைமையை கேட்டறிந்ததாகவும் தனது ட்விட்டர் பக்கத்தில் மோடி கூறியுள்ளார். மேலும் மக்கள் பாதுகாப்புடன் இருக்க பிராத்தனை செய்வதாகவும் தெரிவித்துள்ளார். தேசிய பேரிடர் நிவாரணப் படை மற்றும் பிற நிவாரண ஏஜென்சிகள், மக்களுக்கு தேவையான எல்லாவிதமான உதவிகளையும் வழங்க தயார் நிலையில் உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

Tags : Modi ,Central Government , Vayu storm, federal government, prime minister Modi, tweeted
× RELATED ஈரான் – இஸ்ரேல் இடையிலான போர் பதற்றம்;...