×

வங்கிக்கடன் மோசடி வழக்கு: நீரவ் மோடியின் 4வது ஜாமின் மனுவையும் நிராகரித்தது லண்டன் நீதிமன்றம்

லண்டன்: வங்கிக்கடன் மோசடி வழக்கில் லண்டனில் கைதான இந்திய தொழிலதிபர் நீரவ் மோடியின் ஜாமின் மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. நீரவ் மோடியின் மனுவை 4வது முறையாக லண்டன் ராயல் நீதிமன்றம் நிராகரித்து உத்தரவிட்டுள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கியில் ஸ்விப்ட் முறையில் பண பரிமாற்றம் செய்து ரூ.13,500 கோடி மோசடி செய்த நீரவ் மோடி, லண்டனுக்கு தப்பிச்சென்று தலைமறைவாக இருந்தார். அவர் அங்கு சுதந்திரமாக நடமாடுவது வீடிேயா ஆதாரங்கள் மூலம் தெரிய வந்தது. இதை தொடர்ந்து அமலாக்கத்துறையும், மத்திய அரசும் விடுத்த வேண்டுகோளை தொடர்ந்து நீரவ் மோடி கைது செய்யப்பட்டார். இதையடுத்து லண்டனின் தென்மேற்கு பகுதியில் உள்ள சிறையில் அவர் அடைக்கப்பட்டுள்ளார். இதனிடையே, தனக்கு ஜாமின் கோரி நீரவ் மோடி அடுத்தடுத்து தாக்கல் செய்த 3 மனுக்களை வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. இதையடுத்து, பிரிட்டன் உயர்நீதிமன்றத்தில் 4வது முறையாக ஜாமீன்கோரி  மனு தாக்கல் செய்தார். அந்த மனு மீதான விசாரணை நீதிபதி இன்கிரிட் சிம்லெர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, நீரவ் மோடி எந்த நாட்டுக்கும் தப்ப மாட்டார் என்று உத்தரவாதம் அளிக்க பல்வேறு தனிநபர்கள் தயாராக இருப்பதாகவும், இந்திய அரசு குறிப்பிடுவது போல அவர் கிரிமினல் குற்றவாளி இல்லை என்றும் நீரவ் மோடி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதிட்டார். அதேசமயம், குற்றவாளிகளை நாடு கடத்துவது தொடர்பாக இந்தியா ஒப்பந்தம் மேற்கொள்ளாத நாடுகளுக்கு  நீரவ் மோடி தப்ப வாய்ப்புள்ளது என்றும் இந்திய அரசு தரப்பில் வாதிடப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இந்த விவகாரம் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால் கூடுதல் நேரம் எடுத்துப் பரிசீலிக்க உள்ளதாகவும், மனு மீதான உத்தரவை இன்று பிறப்பிப்பதாகவும் தெரிவித்தார். இந்த நிலையில், இன்று இந்த வழக்கு விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதில், நீரவ் மோடிக்கு ஜாமின் வழங்க நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. ஏற்கனவே, ஜூன் 27 வரை நீரவ் மோடியின் காவலை நீட்டித்து இங்கிலாந்து நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து, நீரவ் மோடியை இந்தியாவிற்கு நாடு கடத்துவது தொடர்பான வழக்கின் விசாரணை ஜூன் 29-ம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : London Court of Fraud ,jail ,Navrat Modi , The bank fraud case, Nirav Modi, Jami's petition, rejection
× RELATED வேலூர் சிறைக்குள் செல்போன் வீச முயற்சி: போலீசார் விசாரணை