அதிமுக பொதுச்செயலாளர் நியமனம் என்ற பேச்சுக்கே இடமில்லை: துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் பேட்டி

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் நியமனம் என்ற பேச்சுக்கே இடமில்லை என துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் கூறியுள்ளார். அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்களின் ஆலோசனை கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. சென்னையில் மிகுந்த பரபரப்பான சூழலில் நடந்த அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் ஒற்றை தலைமை குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. நாடாளுமன்ற தேர்தல் முடிவடைந்த பின்னர் அதிமுகவில் ஒற்றை தலைமை கோரிக்கை வலுப்பெற்ற நிலையில் தலைமை அலுவலகத்தில் சுமார் ஒன்றரை மணி நேரம் இக்கூட்டம் நடைபெற்றது. இதில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் பங்கேற்க அதிருப்தி எம்எல்ஏக்கான ரத்தினசபாபதி, கலைச்செல்வன் மற்றும் பிரபு ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. மேலும் இந்த கூட்டத்தில், உள்ளாட்சி தேர்தலை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது.

மேலும், கூட்டத்தில் மிக முக்கியமான 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. மேலும், கூட்டத்தில் பொதுச்செயலாளர் பதவி குறித்து எந்த முடிவுகளும் எடுக்கப்படவில்லை. இரட்டை தலைமையே தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆலோசனை கூட்டம் நிறைவடைந்ததை அடுத்து செய்தியாளர்களிடம் பேசிய துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம், அதிமுக-வில் அடுத்த அறிவிப்பு வரும் வரை கட்சி செய்தி தொடர்பாளர்கள் ஊடகங்களில் பேசவேண்டாம் என ஆணை பிறப்பித்துள்ளதாக தெரிவித்தார். அவ்வாறு கட்சி கட்டுப்பாட்டை மீறி பேசும் நிர்வாகிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை பாயும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் ஒற்றை தலைமை அமையுமா? என செய்தியாளர்கள் மத்தியில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு, இப்போது உள்ள இரட்டை தலைமை தான் நிலவும் என தெரிவித்தார். மேலும் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் என்ற பேச்சுக்கே இடமில்லை எனவும் தெரிவித்தார். இப்பொது உள்ளபடி ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவியே நீடிக்கும் என கூறினார்.

Tags : Vitilinkam ,general secretary ,AIADMK ,interview , AIADMK, general secretary, assistant coordinator, Vaithilingam
× RELATED இந்தியாவிலேயே சிறிய ஆயுதங்களை தயாரிக்க வேண்டும்: வைஸ் அட்மிரல் பேச்சு