×

எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடத்தில் மண் நிலைத்தன்மையுடன் உள்ளது: ஆய்வு நிறுவனம் சான்றிதழ்

மதுரை: மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடத்தில் மண் நிலை தன்மையுடன் இருப்பதாக ஆய்வு நிறுவனங்கள் அறிக்கை அளித்துள்ளன. 6 மாடி அளவுக்கு கட்டிடம் கட்டலாம் என்றும் நாக்பூர் ஆய்வு மையம் சான்றிதழ் அளித்துள்ளது. மதுரை மாவட்டம் தோப்பூர் பகுதியில் 224.24 ஏக்கர் பரப்பளவில் 1,264 கோடி ரூபாய் மதிப்பீட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ளது. இதற்காக கடந்த ஜனவரி மாதம் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டிய நிலையில், 4 மாதங்களுக்கு மேலாகியும் எந்த பணியும் தொடங்கப்படாமல் இருந்து வந்தது. இந்த நிலையில், 48 மாதங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதையடுத்து மண்ணின் உறுதி தன்மையை கண்டறிய திருவனந்தபுரத்தை சேர்ந்த வல்லுநர்கள் மண் மாதிரியை கடந்த நவம்பர் மாதம் எடுத்துச் சென்றனர். மேலும் பரிசோதனைக்காக எடுத்துச் செல்லப்பட்ட மண் மாதிரி நாக்பூரில் உள்ள ஆய்வு மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

மண்ணை பரிசோதித்த வல்லுநர்கள் எய்ம்ஸ் அமைய இருக்கும் இடத்தில் மண் தரமாக உள்ளது என்றும், 6 மாடி அளவுக்கு கட்டிடம் கட்டலாம் என்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு சான்றிதழ் அனுப்பியுள்ளனர். இந்த நிலையில், கடந்த 10ம் தேதி எய்ம்ஸ் அமையவுள்ள இடத்தில் நிதிக்குழுவைச் சேர்ந்த சஞ்சய்ராய் தலைமையிலான மத்தியக் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். அவர்களுடன் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த குழுவினரும் ஆய்வில் ஈடுபட்டனர். மருத்துவமனை அமைவதற்கு தேவையான வசதிகள் அனைத்தும் சரியாக உள்ளனவா? மருத்துவமனை அமைப்பதற்கான இடம் பரப்பளவு தேவையான அளவில் உள்ளதா? என்பது குறித்து ஜப்பானிய குழுவினர் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வறிக்கையை மத்திய நிதிக்குழுவினர் அளித்த பிறகு கட்டுமான பணிக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : location ,AIIMS Hospital: Survey Institute , AIIMS Hospital, Soil, Stability, Research Institute, Certification
× RELATED ரெடி என்றதும் கோல்ஃப் விளையாடலாம்!