×

நரேந்திர மோடியை மிகப்பெரும் தலைவராக சித்தரித்ததில் ஊடகங்களுக்கும் பங்கு உண்டு: சீதாராம் யெச்சூரி விமர்சனம்

சென்னை: நரேந்திர மோடியை மிகப்பெரும் தலைவராக சித்தரித்ததில் ஊடகங்களுக்கும் பங்கு உண்டு என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி கூறியுள்ளார். சென்னை தியாகராய நகரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், பாஜகவை கடுமையாக விமர்சித்தார். அப்போது அவர் பேசியதாவது, நரேந்திர மோடியை மிகப்பெரும் தலைவராக சித்தரித்ததில் ஊடகங்களுக்கும் பங்கு உண்டு. இந்தியா முழுவதிலும் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக பாரதிய ஜனதா கட்சி 27,000 கோடி ரூபாயை தேர்தலுக்காக மட்டும் செலவு செய்துள்ளனர். புல்வாமா தாக்குதலை பெரிதுபடுத்தி பாஜக பெருமை தேடிக் கொண்டது. எனினும், மதச்சார்பற்ற கூட்டணிக்கும், மத அடிப்படைவாதிகளுக்குமான போட்டியாக கடந்த நாடாளுமன்ற தேர்தல் இருந்தது. இதில் பாஜக இந்துத்துவ அரசியலை முன்னெடுத்து சென்றது. விவசாயிகள் தற்கொலை அதிகரித்திருக்கிறது.

இந்திய ரிசர்வ் வங்கி, சிபிஐ உள்பட அனைத்து அரசியல் சட்ட அமைப்புகளும் பாஜக ஆட்சியில் சிதைக்கப்படுகின்றன என்று கூறியுள்ளார். மேலும் பேசிய அவர், அரசியல் சட்டத்தின் அடிப்படைகளைக் காப்பது தான் முதல் இலக்கு. ஒடுக்கப்பட்டவர்கள், சிறுபான்மையினரபை் பாதுகாப்பதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் குறிக்கோளாகும். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து தொடர்ந்து புகார்கள் வந்து கொண்டு இருக்கின்றன. மொத்தம் பதிவான வாக்குகள் எத்தனை என்பதை தேர்தல் ஆணையம் இதுவரை தெரிவிக்கவில்லை. 300க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பதிவான வாக்கு எண்ணிக்கைக்கும் ஒப்புகைச்சீட்டு எண்ணிக்கைக்கும் ஒத்து போகவில்லை. மும்மொழி கொள்கையை மத்திய அரசு கைவிட வேண்டும்; அனைத்து மொழிகளையும் சமமாக பார்க்க வேண்டும். தமிழகத்தில் மதச்சார்பற்ற அணி இணைந்ததுபோல் இந்திய அளவில் இணையவில்லை என்று கூறியுள்ளார். மேலும், தேர்தலில் வெற்றி பெற்ற கூட்டணி கட்சியான திமுகவின் தலைவர் ஸ்டாலினுக்கு அவர் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.



Tags : Narendra Modi , Narendra Modi, Sitaram Yechury, BJP, Marxist Communist
× RELATED 2 நாள் பயணமாக பூட்டான் சென்றார் பிரதமர் நரேந்திர மோடி..!!