×

விவசாயம் செய்ய நுண்ணீர் பாசனத்திட்டம்... உற்பத்தி, ஏற்றுமதிக்கு அரசு நிதியுதவி

புதுக்கோட்டை: விவசாயத்துறை மற்றும் தோட்டக்கலைத்துறை மூலம் நுண்ணீர் பாசன திட்டம் அமைக்கவும், பந்தல் அமைத்து காய்கள் மகசூல் செய்யவும் அரசு மானியம் வழங்கி வருகிறது. அதனடிப்படையில் புடலை, பாவை, பீர்க்கங்காய்கள் பந்தல் மூலமாக வும், கரும்பு நுண்ணீர் பாசனத்திட்டம் மூலமாகவும் மகசூல் செய்யப்பட்டு வருகிறது. தண்ணீர் பற்றாக்குறை காலத்தில் விவசாயம் செய்வதற்கு வசதியாக அரசு நுண்ணீர் பாசனத்திட்டம் போன்ற பல்வேறு தொழில்நுட்ப யுக்திகளையும், வேளாண் கருவி கள் இடுபொருட்களையும் வழங்கி வருகிறது. கூட்டு பண்ணைய திட்டத்தின்கீழ் ஒருங்கிணைந்த விவசாயம் செய்தால் நல்ல லாபகரமான தொழிலாக விவசாயத்தை மேற்கொள்ள இயலும் என்ற அடிப்படையில் 20 நபர்கள் கொண்ட விவசாய ஆர்வலர் குழு அமைக்கப்பட்டு அதில் 5 குழுக்களை இணைத்து 100 நபர்களை கொண்ட விவசாய உற்பத்தியாளர் குழு அமைக்கப்படுகிறது.

இவர்களுக்கு ரூ.5 லட்சம் மதிப்பில் ஆண்டுக்கு வேளாண் கருவிகள் வழங்கப்பட்டு விவசாயத்தை தமிழக அரசு ஊக்குவித்து வருகிறது. இக்குழுக்களை 1000 நபர்களை கொண்ட குழுக்களாக இணைத்து விவசாய உற்பத்தியாளர் நிறுவனம் என்று அமைக்கப்பட்டு ரூ.15லட்சம் மதிப்பில் வேளாண் கருவிகளும், இடுபொருட்களும் வழங்கப்படுகிறது. இக்குழுக்களில் உள்ள விவசாயிகளுக்கு முன்னுரிமையடிப்படையில் வேளாண் கருவிகள் வாடகைக்கு விடப்படும். குழுக்களில் இல்லாத விவசாயிகளுக்கும் இந்த கூட்டு பண்ணையத்திட்டத்தை அனைத்து விவசாயிகளும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இந்த நிறுவனத்தை நிர்வகிப்பதற்காக முதன்மை செயல் அலுவலர் மத்திய அரசின் மூலம் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நிறுவனத்தில் 7 முதல் 10 வரை குழுக்களை இணைத்து ஏற்றுமதி செய்யக்கூடிய மதிப்புக் கூட்டு விவசாய பொருட்களை உற்பத்தி செய்திடவும், ஏற்றுமதி செய்திடவும் அரசு நிதியுதவி வழங்குகிறது. அரசின் மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்படும் திட்டங்களில் இது போன்ற குழுக் கள் மற்றும் நிறுவனங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். விவசாயத்தை வெற்றி கரமாக மேற்கொள்வதற்கு தண்ணீர் இல்லாத இந்த சூழ்நிலையிலும் சொட்டு நீர் பாசனம் மிக நன்மை தரக்கூடிய ஒன்றாக உள்ளது. சொட்டு நீர் பாசனம், தடுப்பணைகள், பண்ணைக்குட்டைகள், மழைநீர் சேகரிக்கும் இடங்கள் என இது தொடர்பான திட்டங்களை மாநிலம் முழுவதும் செயல்பட்டு வருகிறது.

இது குறித்து வேளாண்துறை அதிகாரிகள் கூறுகையில், விவசாயிகள் மண் வளத்திற்கு முக்கியத்துவம் அளித்து பரிசோதனை செய்து அதற்கேற்றாற்போல விவசாயம் செய்ய வேண்டும். அத்துடன் விதை தேர்வு என்பதும் மிக முக்கியம், சந்தையில் வாங்கி வந்து விதைகளை விதைக்காமல் வேளாண்மைத்துறையின் மூலம் வழங்கப்படும் தரமான விதைகளை விதைக்க வேண்டும். விளைப் பொருட்களை சந்தைப்படுத்த தெரிந்திருக்க வேண்டும். அதற்காக உழவன் செயலியை கைபேசி மூலம் பயன்படுத்த தெரிந்து கொள்ள வேண்டும். எந்தவொரு பொருளையும் அப்படியே விற்காமல் மதிப்பு கூட்டி விற்பனை செய்ய முன்வர வேண்டும். அதிக மதிப்புள்ள வாசனை பயிர்கள் உள்ளிட்டவைகளை வளர்க்க வேண்டும். இதற்காக விவசாயிகளுக்கு கூட்டுப் பண்ணைய திட்டத்தின் மூலம் 5 நாட்கள் பயிற்சி அளிக்கப்படுகிறது என்றனர்.

Tags : Agriculture, microwave irrigation scheme
× RELATED மக்களவை தேர்தலில் வாக்களிப்பதற்காக...