×

கோயில் மைதானத்தில் தேங்கி வீணாகும் தண்ணீரால் பாழடைந்த பொதுக்கிணறு நிரம்புகிறது... கிராமத்து இளைஞர்களின் தீவிர முயற்சி

சேலம்: சேலம் அருகே கிராமத்து இளைஞர்களின் முயற்சியால் பாழடைந்த பொதுக்கிணறு நிரம்பி வருவது, மக்களின் கவனம் ஈர்த்துள்ளது. தமிழகம் முழுவதும் தற்போது கடும் வறட்சி நிலவுவதால் பொதுமக்கள் அன்றாட தேவைக்கு கூட தண்ணீர் இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் தற்போது அரசு அலுவலகம் முற்றுகை, சாலைமறியல் என்று தினமும் தொடரும் போராட்டங்களுக்கு பஞ்சமில்லை. இந்த நிலையில் சேலம் அருகே கிராமத்து இளைஞர்களின் முயற்சியால், பாழடைந்து கிடந்த ஊர் பொதுக்கிணறு நிரம்பி வருவது மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

சேலத்தை அடுத்த வீரபாண்டி அருகேயுள்ளது நைனாம்பட்டி கிராமம். இங்குள்ள மாரியம்மன் கோயில் வளாகத்தில் பொதுக்கிணறு ஒன்று நீண்டநாட்களாக பாழடைந்து கிடந்தது. இந்த கிணற்றை அதே பகுதியை சேர்ந்த 30க்கும் மேற்பட்ட இளைஞர்கள், இணைந்து தூர்வாரி ஆழப்படுத்தி உள்ளனர். இதற்காக அனைவரையும் ஒருங்கிணைக்கும் வகையில் ‘இளம்புயல்’ என்ற குழுவையும் உருவாக்கி, பணிகளை துரிதகதியில் முடித்துள்ளனர். இவர்களின் முயற்சியால், பல வருடங்களாக பாழடைந்து கிடந்த கிணற்றில், தற்போது தண்ணீர் அருவி போல் கொட்டி வருகிறது. இதை அந்தப்பகுதி மக்கள் வியப்புடன் பார்த்துச் செல்கின்றனர்.

இது குறித்து இளம்புயல் குழுவினர் கூறியதாவது: எங்கள் பகுதியில் கடந்த 4மாதங்களாக மழையே இல்லை. இதனால் கிணறுகள் வறண்டு, விவசாயம் அதலபாதாளத்திற்கு சென்றுவிட்டது. ஆயிரக்கணக்கான கூலித் தொழிலாளர்கள், வேலையில்லாமல் தவித்து வருகின்றனர். அதேபோல் இந்த பகுதியில் வசிக்கும் மக்களும் அன்றாட தேவைக்கு கூட தண்ணீரை விலைக்கொடுத்து வாங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்த நிலையில் எங்கள் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மழை பெய்தது. அப்போது மாரியம்மன் கோவில் அருகே உள்ள மைதானத்தில் தண்ணீர், குளம் போல் தேங்கியது. இதனை ஏன் நாம் பயன்படுத்திக்கொள்ளக் கூடாது என்று நினைத்தோம். அப்போதுதான் எங்கள் ஊரில் இருக்கும் மாரியம்மன் கோவில் அருகேயுள்ள பொதுக்கிணறு பாழடைந்து கிடப்பது நினைவுக்கு வந்தது. அந்த கிணற்றை தூர்வாரி, மைதானத்தில் தேங்கும் தண்ணீரை சேமிக்க முடிவு செய்தோம். இது குறித்து ஊர் பெரியவர்களிடமும் ேபசி சம்மதம் பெற்றோம்.

இதையடுத்து கிணற்றை தூர்வாரத் தொடங்கினோம். எங்கள் குழுவில் படிப்பவர்கள், வேலைக்கு செல்பவர்கள், பல்வேறு வயதுடையவர்கள் இருந்தனர். அதனால் விடுமுறை நாட்களில் மட்டும் இந்த வேலையில் ஈடுபட்டோம். அதன்படி கடந்த இரண்டு வாரத்திற்கு முன்னர் கிணற்றை ஆழப்படுத்தும் பணியில் ஈடுபட்டோம். சுமார் 20அடி வரை ஆழப்படுத்தி தடுப்புச் சுவர் எழுப்பினோம். கோயில் மைதானத்தில் இருந்து குழாய் ஒன்றை பொருத்தி அங்கிருக்கும் மழை நீரை, கிணற்றுக்குள் விடும் வகையில் செய்தோம். நாங்கள் எதிர்பார்த்தது போலவே நேற்று முன்தினம், பெய்த மழையில், மைதானத்தில் நீர்தேங்காமல் அருவி போல், கிணற்றுக்குள் கொட்டியது. ஒரே நாளில் மட்டும் 5அடிக்கு மழைநீர் தேங்கியது. கடந்த 20ஆண்டுகளாக பாழடைந்து கிடந்த கிணற்றில் தற்போது தண்ணீர் கொட்டுவதை பார்த்த பொதுமக்கள் ஆரவாரம் செய்து மகிழ்கின்றனர். நிச்சயமாக இந்த முயற்சியால் எங்கள் பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் உயரும் என்று நம்புகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags : temple stadium , Salem, well
× RELATED காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம்...