×

பணியாளர்கள் பற்றாக்குறை அதிகரிப்பு... நெல்லை மாநகராட்சியில் மலைபோல் குவியும் குப்பைகள்

நெல்லை: நெல்லை மாநகராட்சி சுகாதார துறையில் பணியாளர்கள் பற்றாக்குறை அதிகரிப்பால் குப்பைகள் தேக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சில இடங்களில் குப்பைத்தொட்டிகள் மாயமாகி வருவதால் பொதுமக்கள் குப்பைகளை கொட்ட முடியாமல் திண்டாடி வருகின்றனர். நெல்லை மாநகராட்சியில் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் நடந்து வருகின்றன. மாநகராட்சியில் பல்வேறு இடங்களில் சிறுவர் விளையாட்டு பூங்காக்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இத்திட்டத்தின் கீழ் நெல்லை சந்திப்பு பஸ்நிலையத்தை புனரமைக்கும் பணிகளும் நடந்து வருகின்றன. நெல்லை பொருட்காட்சி மைதானத்தில் வணிகவளாகம் கட்டும் பணிகளும் நடக்கவுள்ளன. நெல்லை மாநகராட்சியில் குப்பைகளை அகற்றுவதிலும் பல்வேறு புதிய நடைமுறைகள் அமல்படுத்தப்பட உள்ளன. இந்நிலையில் பணியாளர்கள் பற்றாக்குறை எதிரொலியாக நெல்லை மாநகராட்சியில் குப்பைகள் அள்ளும் பணிகள் தொய்வடைய தொடங்கியிருப்பது பொதுமக்களை பாதிப்பாக உள்ளது. நெல்லை மாநகராட்சி நாளுக்கு நாள் விரிவாக்கம் அடைந்து வருகிறது. அதற்கு ஏற்ப குப்பைகள், கழிவுகளும் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனை உடனுக்குடன் வெளியேற்றுவதற்காக ஆங்காங்கே குப்பைத் தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. சில இடங்களில் மட்கும் மற்றும் மட்காத குப்பைகளை பெற்றிட தனித்தனி குப்பைத்தொட்டிகளும் வைக்கப்பட்டுள்ளன. ஆனால் இவற்றை முறையாக அள்ளி செல்வதில்லை.

நெல்லை மாநகராட்சியின் விரிவாக்க பகுதிகளில் தற்போது குப்பைகள் அள்ளுவதே இல்லை என புகார்கள் அதிகளவில் வருகின்றன. குறிப்பாக கேடிசி நகர், வி.எம்.சத்திரம், என்ஜிஓ காலனி மற்றும் திருமால் நகர் பகுதிகளில் குப்பைகள் அள்ளுவதில் கடும் தேக்கம் ஏற்பட்டுள்ளது. பெருமாள்புரம், இலந்தகுளம், பேட்டை, மேலப்பாளையத்தில் பெரும்பாலான வீதிகளில் இத்தகைய பிரச்னைகள் காணப்படுகின்றன. குப்பைகள் அள்ள வாரம் ஒருமுறை வீடுகளுக்கு பணியாளர்கள் வருவதால், சில வீடுகளில் 3 பிளாஸ்டிக் குப்பை கூடைகளை வைத்துள்ளதாக கேடிசி நகர் பகுதியினர் புகார் தெரிவிக்கின்றனர். பேட்டை மீனாட்சி தியேட்டர் அருகே குடியிருப்பு பகுதியில் குப்பைகள் கொட்டப்படுகின்றன. பல்வேறு பகுதிகளில் இருந்து சேகரிக்கப்படும் குப்பைகள் இங்கு கொட்டப்படுவதுடன் அதன் அருகிலேயே மாநகராட்சி குடிநீர் டேங்க்கும் உள்ளது. குப்பைகள் அங்கு கொட்டப்படுவதால் பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.

நெல்லை மாநகராட்சியில் குப்பைகளை அள்ளி செல்ல ஒரு மண்டலத்திற்கு 3 லாரிகள் உண்டு. டிரைவர்கள் இல்லாததால் அவற்றையும் முறையாக இயக்குவதில்லை. குப்பைகள் பெறும் சுகாதார ஊழியர்கள் பெரிய குப்பைத்தொட்டிகளில் அப்படியே கொட்டிவிட்டு செல்கின்றனர். இதனால் அங்கும் குப்பைகள் நிறைந்து சுகாதார சீர்கேடுகள் நிலவுகின்றன. சில இடங்களில் சிறிய அளவிலான குப்பைத்தொட்டிகள் தற்போது மாயமாகியுள்ளன. நெல்லை மாநகராட்சியில் சுகாதாரம் மற்றும் துப்புர பணிகளை கவனிக்க மட்டுமே 1500 பணியாளர்கள் முன்பு இருந்தனர். தற்போது சுமார் 600க்கும் குறைவான பணியாளர்களே பணியில் உள்ளனர். அதிலும் 300க்கும் குறைவான ஊழியர்கள் நிரந்தர ஊழியர்கள் ஆவர். மற்றவர்கள் கொசு ஒழிப்பு மற்றும் சுனாமி பணியாளர்கள் என்ற அடிப்படையில் தற்காலிக பணியில் உள்ளனர். இவர்களுக்கு வழங்கப்படும் கூடுதல் சுமை குப்பைகள் அள்ளுவதில் தொய்வை ஏற்படுத்துகிறது. இதிலும் மட்கும், மட்காத குப்பைகளை பிரிக்கும் மையங்களுக்கு 2 பேர் அனுப்பப்படுவதால் வார்டுகளில் குப்பைகளை அள்ள ஆளில்லை. நெல்லை மாநகராட்சியில் சுகாதார ஆய்வாளர்களும், மேஸ்திரிகளும் பிளாஸ்டிக் ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு திசை திருப்பி விடப்படுவதால் குப்பைகள் அள்ளுவதில் கவனம் இயல்பாகவே குறைகிறது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் நெல்லை நகரம் பொலிவு பெற வேண்டுமெனில் அதில் குப்பைகள் அகற்றம் முக்கிய பங்காற்ற வேண்டும் என்பதை மாநகராட்சி அதிகாரிகள் உணர்ந்து அதற்கேற்ப செயல்பட வேண்டும்.

Tags : staffs ,corporation ,Nellai , Tirunelveli, Trash
× RELATED ஈரோடு மாநகராட்சியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு இல்லை