×

கோடை வெயிலின் தாக்கம் குறையவில்லை... அன்னாசி பழங்கள் அழுகியதால் குப்பையில் கொட்டும் வியாபாரிகள்

கும்பகோணம்: அக்னி நட்சத்திரம் முடிந்தாலும் தஞ்சை மாவட்டத்தில் கோடை வெயிலின் தாக்கம் குறையவில்லை. இதனால் தஞ்சை பகுதிக்கு விற்பனைக்காக கொண்டு வந்த அன்னாசி பழங்கள் அழுகிவிட்டதால் குப்பையில் வியாபாரிகள் கொட்டி செல்கின்றனர். பிரேசில் நாட்டை தாயகமாக கொண்டது அன்னாசி பழம். தற்போது அனைத்து நாடுகளிலும் சாகுபடி செய்து வருகின்றனர். இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் சாகுபடி செய்தாலும் கேரள மாநிலத்தில் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரை நடவு செய்யப்படுகிறது. நடவு செய்த 12 மாதங்களில் பூ பூக்க ஆரம்பிக்கும். 18 மாதங்களில் பழங்கள் அறுவடைக்கு தயாராகும். ஒரு எக்டருக்கு 50 டன் வரை பழங்கள் கிடைக்கும். அன்னாசி பழத்தில் உடலுக்கு தேவையான பல்வேறு சத்துகள் உள்ளன. வைட்டமின் ஏ, பி, சி சத்துகள் நிறைந்துள்ளன. அன்னாசி இலைச்சாறு வயிற்றில் உள்ள பூச்சிகளை அழிக்கும் தன்மை கொண்டது. அன்னாச்சி பழச்சாறுடன் தேன் சேர்த்து தொடர்ந்து 40 நாட்கள் சாப்பிட்டால் ஒருபக்க தலைவலி, வாய்ப்புண், மூளைக்கோளாறு, ஞாபகசக்தி குறைவு போன்ற நோய்கள் குணமடையும். அன்னாசி பழத்தை தேனில் கலந்து சாப்பிட்டு வர உடல் பலம் கூடும். மஞ்சள்காமாலை உள்ளவர்கள் அன்னாசி பழச்சாற்றை சாப்பிட்டால் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நோய் எதிர்ப்பு சத்தி அதிகமுள்ள அன்னாசி பழத்தை சாப்பிட்டால் பல்வேறு நோய் தாக்குதலில் இருந்து தப்பிக்கலாம். அன்னாசி பழம் சாப்பிடுவதால் சளி தொல்லை, ப்ளூ காய்ச்சல் உள்ளிட்டவற்றில் இருந்தும் பாதுகாப்பு கிடைக்கும்..

சிலருக்கு நிற்காமல் தொடர்ந்து விக்கல் வரும். அவர்கள் ஒரு சங்கு (பாலாடை) அளவுக்கு அன்னாசி பழச்சாற்றில் சர்க்கரை சேர்த்து அருந்தினால் குணமாகும். மலச்சிக்கல் தீர இதே கலவையை 2 மடங்கு அதிகமாக அருந்த வேண்டும். தொண்டைப்புண், தொண்டையில் சதை வளர்ச்சி, நல்ல குரல் வளம் பெற விரும்புவோருக்கு அன்னாசி பழச்சாறு சிறந்தது. இத்தகைய சிறப்பு பெற்ற அன்னாசி பழம், ஒவ்வொரு கோடை காலத்திலும் தஞ்சை மாவட்ட பகுதிக்கு லாரி மூலம் விற்பனைக்கு வரும். இதை மினி லாரிகளில் பிரித்து ஏற்றி தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் சில்லரை விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படும். ஒரு ஜோடி அன்னாசி பழம் ரூ.20 முதல் ரூ.40 வரை விற்பனை செய்யப்படுகிறது. தற்போது சித்திரை மாத அக்னி நட்சத்திரம் முடிந்தாலும் கோடை வெயிலின் தாக்கம் குறையவில்லை. இதனால் விற்பனைக்காக தஞ்சை பகுதிக்கு கொண்டு வரப்பட்ட அன்னாசி பழங்கள் சில நாட்களில் அழுகி விட்டது. இதனால் விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டதால் அனைத்து அன்னாசி பழங்களையும் தஞ்சை- பட்டுக்கோட்டை பைபாஸ் சாலையோரம் குப்பையில் விவசாயிகள் கொட்டி செல்கின்றனர். இதனால் பல லட்ச ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.

Tags : Litter, pineapple fruits
× RELATED கடல் சீற்றம் காரணமாக, திருச்செந்தூர் கடலில் பக்தர்கள் குளிக்க தடை