×

60 அடி அகலத்துக்கு நில ஆர்ஜிதம் செய்து 10 ஆண்டுக்கு மேலாகிறது... வாணியம்பாடி- ஐதராபாத் தேசிய விரைவுச்சாலை அமைக்கப்படுமா?

வாணியம்பாடி: வாணியம்பாடியில் 60 அடி அகலத்துக்கு நில ஆர்ஜிதம் செய்து 10 ஆண்டுகளுக்கு மேலாகும் வாணியம்பாடி- ஐதராபாத் தேசிய விரைவுச்சாலை பணியை விரைந்து அமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழக ஆந்திர எல்லையான நனையால் என்னும் பகுதியில், நள்ளிரவில் மினி லாரியில் மாம்பழம் ஏற்றிவந்தனர். அப்போது, இங்குள்ள குறுகிய வளைவில் திரும்பியபோது, ஏற்பட்ட விபத்தில் 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன், பலரும் படுகாயமடைந்தனர். சாலையின் அகலம் சுமார் 12 அல்லது 15 அடிக்கு மட்டும் இருந்த காரணத்தால் தான், இதுபோன்ற விபத்துகள் இன்றளவும் தொடர் கதையாகி உள்ளது. இந்நிலையில், வேலூர் மாவட்டம், வாணியம்பாடி ஜாபராபாத்திலிருந்து, ஐதராபாத்துக்கு செல்லும் விரைவு சாலை அமைக்க, கடந்த 10 ஆண்டுகளுக்கும் முன்பு, 60 அடி அகலத்துக்கு, விவசாய நிலங்களை, தமிழக அரசு நில ஆர்ஜிதம் செய்தது. ஆனால், இதுவரை ஆர்ஜிதம் செய்யப்பட்டதற்கான மஞ்சள் வண்ணமிட்ட எல்லைக்கற்கள் மட்டுமே நடப்பட்டுள்ளது. நிலத்துக்கு உரியோர் அவற்றில் பயிர்செய்து வருகின்றனர். ஆனால், எவ்வித சாலை பணியும் தொடங்கப்படாமல், கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதன் காரணமாக, 60 அடி அகல தேசிய நெடுஞ்சாலை என்னும் கனவு, நிறைவேற்றப்படாமல் உள்ளது. அதன் பின்னர் பல மாவட்டங்களில் பல பகுதிகளில் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு ஆங்காங்கே பணிகள் நடந்துள்ளன.

இந்நிலையில், வாணியம்பாடி கோணாமேடு முதல் கச்சேரி சாலை வழியாக, மேட்டுப்பாளையம், ஜாபராபாத், தும்பேரி, அண்ணாநகர், புளிய மரத்துபெண்டா, வெலதிகமாணி பெண்டா, ஆர்மாணி பெண்டா வழியாக வீரண்ணமலையைத்தொடர்ந்து, ஆந்திர மாநிலத்துக்கும், பெங்களூருவுக்கும் அங்கிருந்து ஐதராபாத்துக்கும் செல்ல மலைச்சாலை 60 அடி அகலத்துக்கு அமைக்கும் பணிக்காக ஆர்ஜிதம் செய்யப்பட்ட நிலங்கள் தமிழக எல்லைகளில் இன்னமும் அப்படியே உள்ளன. வாணியம்பாடி பகுதியில் இந்த சாலைகள் அமைக்கப்பட்டால் ஆந்திராவில் தற்போது கட்டப்பட்டு வரும் பல நூறு கோடி ரூபாய் மதிப்பிலான விமான நிலையத்துக்கு குறைந்த நேர செலவில், பொதுமக்கள் சென்றடையலாம். ஆந்திர எல்லைப்பகுதியில் அமைந்துள்ள விமான நிலையத்தையொட்டி சிப்காட் அமைக்கவும் ஆந்திர அரசு திட்டம் தீட்டியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த சிப்காட் அமையுமானால், இப்பகுதியில் குடியிருப்புகளும் அதிகமாகிவிடும். பொதுமக்களின் போக்குவரத்துக்கும் பஞ்சமிருக்காது. இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு தமிழக அரசு ஏற்கனவே நிலங்களை ஆர்ஜிதம் செய்து வைத்து உள்ளவற்றில் உடனடியாக இனியும் காலம் தாழ்த்தாது சாலை அமைக்கவேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Tags : land area ,Waniyampadi - Will Hyderabad National Expressway , Vaniyambadi, Hyderabad, National Expressway
× RELATED வாயலூர் ஐந்து காணி பகுதியில் இருளர்...