×

தண்ணீரில் தத்தளிக்கும் கேரளா; தண்ணீரின்றி தத்தளிக்கும் தமிழகம்... கடலில் கலக்கும் கேரள நதிகள் தமிழகம் நோக்கி திருப்பப்படுமா?

மதுரை: தென்மாவட்டங்கள் தண்ணீருக்கு தத்தளிக்கும் தருணத்தில், கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வீணாக கடலில் கலக்கும் கேரள நதி நீரை தமிழகம் நோக்கி திருப்பி விட வேண்டுமென்ற எதிர்பார்ப்பு விவசாயிகள், பொதுமக்களிடயே எழுந்துள்ளது. கடந்த பருவமழை சீசனில் கேரள அரசு வெள்ளத்தில் மிதந்தது போன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நடக்காமல் இருக்க, நதிகள் இணைப்பு அவசியம் என வல்லுனர்கள் வலியுறுத்துகின்றனர். தலைவிரித்தாடும் தண்ணீர் பிரச்னைக்கு தீர்வு காண கோதாவரி நதியில் ஆண்டுக்கு 1,100 டிஎம்சி நீர் கடலில் கலந்து வீணாவதை தடுக்க, அந்த நதியை கிருஷ்ணா, பெண்ணாறு, காவிரி நதிகளுடன் ரூ.60 ஆயிரம் கோடியில் இணைக்க திட்டம் தயார் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்தார். ஆனால், சில தினங்களுக்கு முன் தேசிய பசுமை தீர்ப்பாயம் சுற்றுச்சூழல் அனுமதியை காரணம் காட்டி, கோதாவரி - பெண்ணாறு இணைப்பு திட்டத்திற்கு இடைக்கால தடை விதித்துள்ளது. எனவே இந்த திட்டம் எப்போது சாத்தியமாகும் என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது.

தமிழகத்தில் மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை உள்ளடக்கிய தென்மாவட்டங்களில் போதிய மழையின்றி அணைகள், ஆறுகள், குளங்களில் வறட்சி நிலவுகிறது. இதனால் பாசனம், குடிநீருக்கு கடும் பற்றாக்குறை நிலவுகிறது. இதற்கு தீர்வு காண ஏற்கனவே ஆய்வு முடிக்கப்பட்ட திட்டங்கள் நிறைவேற வாய்ப்பு இருந்தும் கானல் நீராக நிற்கின்றன. அதன் விவரம் வருமாறு: கேரளாவில் ஓடும் 44 நதிகளில் ஆண்டுக்கு 2,500 டிஎம்சி தண்ணீர் உற்பத்தியாகிறது. இதில் 500 டிஎம்சி தண்ணீரைத்தான் கேரளா பயன்படுத்துகிறது. மீதி வீணாக கடலில் கலக்கிறது. ஏனென்றால் அங்கு பாசன நிலங்கள் குறைவு. தமிழகத்திலுள்ள 34 நதிகளில் பெரும்பாலும் வறண்ட நிலையே நிலவுகிறது. இங்கு பல லட்சக்கணக்கான ஏக்கரில் பாசன நிலங்கள் உள்ள. எனவே கேரளாவிலுள்ள பம்பை, அச்சங்கோவில் நதிகளை தமிழகத்தில் உள்ள வைப்பாற்றுடன் இணைத்தால் வற்றாத ஜீவநதியாகி, விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் வறட்சி நீங்கும். குடிநீர் பிரச்னையும் தீரும். இதற்காக ஆய்வு நடத்தியதோடு சரி. அடுத்தக்கட்ட முயற்சி இதுவரை துவங்கவில்லை.

இதேபோல், கேரளாவில் மேற்குத் தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும் கல்லாறு மேற்கு நோக்கி பாய்ந்து அரபிக்கடலில் கலக்கிறது. அதை கிழக்கு நோக்கி திருப்பி வைகை ஆற்றுடன் இணைக்க 1982ல் ஆய்வு நடத்தி முடிக்கப்பட்டது. இத்திட்டம் நடைமுறைக்கு வந்தால், வைகை ஆறு பாயும் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு முடிவுக்கு வரும். கல்லாற்றில் இருந்து 2 கிமீ தூரம் புதிதாக சுரங்கப்பாதையை உருவாக்கி, பெரியாறு அணையில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் வெளியேறும் பகுதிக்கு கொண்டு வந்து சேர்க்க முடியும். இங்கு பொறியாளர் பென்னிகுக் உருவாக்கிய சுரங்கப்பாதை வழியாக வைகைக்கு திருப்பிக்கொள்ளலாம். இதற்காக இந்த சுரங்கப்பாதையின் ஆழம், அகலத்தை விரிவுபடுத்த வேண்டும். இதன் மூலம் குடிநீர் பிரச்னை மட்டுமின்றி பாசன தண்ணீர் பற்றாக்குறைக்கும் தீர்வாக அமையும் என ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

இதுகுறித்து மூத்த பொறியாளர், பாசன விவசாயிகள் கூறும்போது, ‘‘கோதாவரியில் இருந்து 1,100 டிஎம்சி நீரை் கடலில் வீணாக்காமல், கிருஷ்ணா, பெண்ணாறு, காவிரியுடன் இணைக்க திட்டமிடுவது வரவேற்கக்கூடியது. அதேநேரத்தில், கேரளாவில் ஆண்டுக்கு 2,000 டிஎம்சி நீர் கடலில் வீணாக கலக்கிறது. அதை தமிழகம் நோக்கி திருப்பினால், தென்மாவட்டங்களில் பாசனம், குடிநீர் பிரச்னை தீரும் என்பதை நினைத்துப் பார்க்க மறுக்கிறார்கள். மத்திய அரசு நினைத்தால் இந்த திட்டத்தை நிறைவேற்றலாம். தமிழக அரசும் வலியுறுத்த வேண்டும். கேரளாவில் மிதமிஞ்சிய மழை பெய்து அடிக்கடி வெள்ள அபாயம் ஏற்படுகிறது. 2018ல் ஏற்பட்ட வெள்ள சீற்றத்திற்கு 350 பேர் பலியாயினர். தற்போது தென்மேற்கு பருவமழை தொடங்கியதும், ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அந்த தண்ணீரை தமிழகம் நோக்கி திருப்புவதற்கு தயக்கம் ஏன்? பருவநிலை மாறி வரும் சூழலில் கேரள நதிகளில் வீணாகும் நீரை தமிழகத்திற்கு திருப்புவது காலத்தின் கட்டாயம்’’ என்கின்றனர்.

Tags : Kerala ,rivers ,river , Tamil Nadu, Rivers, Sea
× RELATED தமிழக – கேரள எல்லையோர கிராமங்களில்...