×

விபத்தில் சிக்கிய ஏ.என்-32 ரக விமானத்தை மீட்கும் பணியில் இந்திய விமானப்படை: சிதைந்த விமானத்தின் புகைப்படம் வெளியீடு

சியாங்: காணாமல் போன ஏஎன் 32 ரக விமானத்தின் பாகங்கள் அருணாச்சலபிரதேச வனப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடந்த 8 நாட்களாக தேடுதல் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், அருணாச்சல பிரதேசத்தின் சியாங் மாவட்டம் கட்டி என்ற கிராமம் அருகே சிதைந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என தகவல் வெளியானது. தற்போது, இந்திய விமானப்படையின் எம்.ஐ -17 ரக ஹெலிகாப்டரில் இருந்து விமானம் சிதைந்து கிடக்கும் புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த புகைப்படம் சுமார் 12,000 அடி உயரத்தில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, விபத்து நடந்த பகுதிக்கு அருகே மீட்பு ஹெலிகாப்டர்கள் இன்று காலை தரையிறக்கப்பட்டு மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. அடர்ந்த வனப்பகுதி என்பதால் ஹெலிகாப்டரை தரையிறக்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால், வானிலிருந்தே மீட்புப்படையினர் தரையிறக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இருப்பினும், விபத்துக்குள்ளான விமானம் இருக்கும் பகுதிக்கு அருகே இந்திய விமானப்படையின் ஹெலிகாப்டரை தரையிறக்கியுள்ளனர். மேலும் நேற்று இரவே, தரைப்படையினர் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அசாம் மாநிலத்தின் ஜோர்ஹத் பகுதியில் இருந்து விமானப்படைக்கு சொந்தமான ஏ.என்-32 என்ற விமானம் கடந்த ஜூன் 3ம் தேதி பகல் 12.27 மணிக்கு புறப்பட்டு சென்றது. அருணாச்சல பிரதேசத்தில் உள்ள மேன்சுக்கா என்ற ராணுவ தளத்துக்கு சென்ற இந்த விமானத்தில் 8 விமானிகள் மற்றும் 5 பயணிகள் என மொத்தம் 13 பேர் இருந்தனர். விமானம் புறப்பட்டு சென்ற 35 நிமிடத்துக்கு பின்னர் விமான கட்டுப்பாடு மையத்துடனான தொடர்பை இழந்தது. இதனை தொடர்ந்து விமானத்தை தேடும் பணி தொடங்கப்பட்டது. அப்போது, மாயமான இந்திய விமானப் படை விமானத்தின் உடைந்த பாகங்கள் அருணாச்சலப்பிரதேசத்தின் மேற்கு சியாங் மாவட்டத்தின் டாடோ என்ற இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.

இருப்பினும் விமானம் குறித்தோ அதிலிருந்த பயணிகள் குறித்தோ தகவல் தெரியவில்லை. மேலும் மோசமான வானிலை காரணமாக காணாமல் போன விமானத்தை கண்டறிவதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து, சுகோய் 30 மற்றும் C-130J ஹெர்குலஸ் ரக விமானப்படை விமானங்கள் உதவியுடன் மாயமான விமானத்தை தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்தன. இந்த நிலையில், நேற்று அருணாச்சல பிரதேசத்தின் சியாங் மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இதையடுத்து இந்திய விமானப்படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து விமானத்தை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் சிதைந்த விமானத்தின் புகைப்படங்களும் வெளியாகியுள்ளன. இதையடுத்து ஏஎன் 32 ரக விமானம் விபத்தில் சிக்கியது உறுதியாகியுள்ளது. மேலும் விமானத்தில் பயணித்த பயணிகள் குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.

Tags : Indian Air Force: Photo Release of a Lost Flight , AAN-32 aircraft, photo, Indian Air Force, rescue work
× RELATED இந்தோனேஷியாவில் பலமுறை வெடித்து சிதறிய எரிமலை