ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக்கோரிய மனுவை விசாரிக்க 8 வழிச்சாலை வழக்கை ஏற்கனவே விசாரித்த நீதிபதிகள் நியமனம்: தலைமை நீதிபதி தாஹில் ரமானி உத்தரவு

சென்னை: ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக்கோரிய வழக்கை விசாரிக்க உயர் நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச் விருப்பம் தெரிவிக்காததால் 8 வழிச்சாலை வழக்கை விசாரித்த நீதிபதிகள் அடங்கிய புதிய டிவிஷன் பெஞ்சை அமைத்து தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளார். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு வைக்கப்பட்டுள்ள சீலை அகற்றக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. இதை எதிர்த்து தமிழக அரசு சார்பில் வாதிடப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் கே.கே.சசிதரன், பி.டி.ஆஷா ஆகியோர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சசிதரன், ஏற்கனவே உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் இந்த வழக்கை விசாரித்துள்ளேன். எனது உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றம் வரை வழக்கு தொடரப்பட்டுள்ளது. எனவே, வழக்கை மீண்டும் விசாரிக்க விரும்பவில்லை. அதனால், இந்த வழக்கை வேறு பெஞ்சுக்கு மாற்றுமாறு வழக்கு தலைமை நீதிபதிக்கு அனுப்பி வைக்கப்படுகிறது என்றார்.

இதையடுத்து, வேதாந்தா நிறுவனத்தின் சார்பில் மூத்த வக்கீல் பி.எஸ்.ராமன் தலைமை நீதிபதி தாஹில் ரமானி அடங்கிய முதல் டிவிஷன் பெஞ்சில் ஆஜராகி, இந்த வழக்கை விசாரிக்க தனி பெஞ்சை அமைக்குமாறு முறையிட்டார். இதை ஏற்றுக்கொண்ட தலைமை நீதிபதி, ஸ்டெர்லைட் ஆலை வழக்கை விசாரிக்க நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், பவானி சுப்பராயன் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்சை (இந்த டிவிஷன் பெஞ்ச்தான் சேலம்-சென்னை 8 வழிச்சாலை வழக்கை விசாரித்தது) நியமித்து உத்தரவிட்டார்.

× RELATED உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீது...