பள்ளி மாணவர்கள் பாலின பாகுபாடு இல்லாமல் பெண்கள், 3ம் பாலினத்தவருடன் பழகுவது எப்படி?: ஆசிரியர்களுக்கு யுனெஸ்கோ பயிற்சி

சென்னை: மாணவர்கள், மாணவிகள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு பாலின அச்சுறுத்தல் இல்லாமல் தவிர்ப்பது எப்படி என்ற பாலின வேறுபாடு தொடர்பான பயிற்சி அளிக்க யுனெஸ்கோ நிறுவனம் முன்வந்துள்ளது.  அதற்காக வாரம் ஒரு முறை ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க யுனெஸ்கோவுடன் பள்ளிக் கல்வித்துறை ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது. தமிழகத்தில் உள்ள நடுநிலைப் பள்ளி, உயர்நிலை மற்றும் மேனிலைப் பள்ளிகளில் படிக்கும் வளரிளம் பருவ மாணவர்களின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை மேம்படுத்துவதற்காக பள்ளிக்கல்வித்துறை மற்றும் யுனெஸ்கோ ஆகியவை இடையே நேற்று ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

சென்னை அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தில் நடந்த இந்த நிகழ்வில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், இந்தியாவுக்கான யுனெஸ்கோ நிறுவனத்தின் இயக்குநர் எரிக் ஃபல்ட் ஆகியோர் கையெழுத்திட்டனர். இதையடுத்து, யுனெஸ்கோ நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கப்பட்ட ‘Be A Buddy, Not A Bully’ என்ற தலைப்பில் ஒரு சிறு அறிக்கை வெளியிடப்பட்டது. இதையடுத்து பள்ளிக் கல்வி அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நாளை பள்ளிகளில் படிக்கும் 70 லட்சம் மாணவ- மாணவியருக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்கிறார். அடுத்த வாரம் அது அமலுக்கு வருகிறது. இன்று யுனெஸ்கோவுடன் ஒரு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. அதன் மூலம் மாணவர்கள் எப்படி உடல் நலத்துடன் இருப்பது, மற்றவர்களுடன் நட்பாக பழகுவது தொடர்பாகவும், பெண்கள், மூன்றாம் பாலினத்தவருடன் எப்படி நட்பாக பழகுவது போன்றவற்றை மாணவர்களுக்கு கற்றுத்தரப்பட உள்ளது. அதன்பேரில் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு வாரம் ஒரு முறை பயிற்சி அளிக்கப்படும். அவர்கள் மாணவர்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி பாலின வேறுபாடுகளை களைய வழிகாட்டுவார்கள். இந்த பயிற்சி மாவட்ட வாரியாக அளிக்கப்படும்.

70 லட்சம் மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு

பள்ளிக் கல்வி அமைச்சர் செங்கோட்டையன் நேற்று அளித்த பேட்டி: நடுநிலைப் பள்ளிகளில் தொடங்கப்பட்டுள்ள எல்கேஜி, யுகேஜி வகுப்புகளில் நியமிக்கப்படும் இடைநிலை ஆசிரியர்கள் கவலைப் பட வேண்டியதில்லை. பின்னர் அவர்களுக்கு பதிலாக சிறப்பு ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள். கல்விக்கான புதிய டிவி விரைவில் தொடங்கப்படும். பள்ளி மாணவர்கள் வசதிக்காக இ-லைப்ரரி தொடங்கப்படும். மாணவர்கள் செல்போன் மூலம் புத்தகங்களை படிக்க முடியும். எல்கேஜி, யுகேஜி வகுப்புகளில் 65 ஆயிரம் குழந்தைகள் சேர்ந்துள்ளனர். அரசுப் பள்ளிகளில் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு 2 லட்சம் மாணவ மாணவியர் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளனர். மத்திய அரசு கொண்டு வந்துள்ள கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தை மறு பரிசீலனை செய்ய வேண்டும். அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் குறைந்த பட்சம் 2 மணி நேரமாவது விளையாட வேண்டும் என்ற நோக்கில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அதற்காக 20 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவினர் நடத்திய ஆய்வில் தமிழகத்தில் 257பள்ளிகளில் 5 முதல் 10 ஏக்கர் வரை நிலம் இருப்பது தெரியவந்துள்ளது. 1000 பள்ளிகளில் 1 அல்லது 2 ஏக்கர் நிலம் இருப்பதும் தெரியவந்துள்ளது. அந்த பள்ளிகளில் சிறு சிறு விளையாட்டுகளை கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Related Stories:

More
>