×

5 நாள் போராட்டத்துக்கு பிறகு ஆழ்துளை கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட சிறுவன் பலி

சங்ரூர்: பஞ்சாபில் 150 அடி ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 2 வயது சிறுவன், 5 நாள் போராட்டத்துக்கு பிறகு மீட்கப்பட்டும், பரிதாபமாக உயிரிழந்தான். பஞ்சாப் மாநிலம், சங்ரூர் மாவட்டத்தில் உள்ள பகவான்பூர் என்ற கிராமத்தை சேர்ந்த 2 வயது சிறுவன் பத்வீர் சிங். இவன் கடந்த வியாழக்கிழமை தனது வீட்டின் அருகில் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது, அங்கிருந்த 150 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தான். இதைப் பார்த்த சிறுவனின் தாய்,  குழந்தையை மீட்க போராடினார். ஆனால், முடியவில்லை.

தகவலறிந்து வந்த மீட்புக்குழுவினர் சிறுவனை மீட்க போராடினர். ஆழ்துளை கிணறு அருகில் பள்ளம் தோண்டி மீட்பு  பணியில் ஈடுபட்டனர். சிறுவனுக்கு தொடர்ந்து ஆக்சிஜன் வழங்கப்பட்டது. 5 நாள் போராட்டத்துக்குப் பிறகு நேற்று அதிகாலை 5.30 மணிக்கு சிறுவன்  மீட்கப்பட்டான். அப்போது மயங்கிய நிலையில் இருந்த சிறுவனை மருத்துவமனைக்கு  தூக்கிச் சென்றனர். அங்கு சிறுவனை பரிசோதனை செய்த மருத்துவர், அவன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதை கேட்ட சிறுவனின் பெற்றோர் கதறி அழுதனர். பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங், தனது டிவிட்டர் பதிவில், ‘சிறுவனின் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலை  தெரிவித்துக் கொள்கிறேன். இனி இதுபோன்ற சம்பவம் நடைபெறாமல் தடுப்பதற்காக, திறந்தவெளி போர்வெல் வைத்துள்ள உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டுள்ளேன்’ என  குறிப்பிட்டுள்ளார்.

Tags : struggle ,well , Bore well, recovered boy, kills
× RELATED நாடு சந்திக்க இருக்கக்கூடிய 2வது...