×

கோபி அருகே தனியாருக்கு தண்ணீர் விற்றதால் ஆத்திரம் மண் அள்ளிப்போட்டு கிணற்றை மூடிய மக்கள்

கோபி: கோபி அருகே உள்ள கலிங்கியத்தில் தண்ணீர் விற்பனைக்கு பயன்படுத்தி வந்த கிணற்றை பொதுமக்கள் மூடினர். கோபி அருகே உள்ள கலிங்கியம் ஊராட்சியில் சின்ன குளம், கலிங்கியம், அவ்வையார்பாளையம் உள்ளிட்ட 10 கிராமங்கள் உள்ளது. இந்த ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளுக்கு கிணறு மூலமாக குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் சின்னகுளம் கிராமத்தில் பொது இடத்தில் 20 அடி ஆழத்தில் ராட்சத கிணறு தோண்டப்பட்டது. அங்கிருந்து வேறு ஒரு கிராமத்திற்கு குடிநீர் தேவைக்காக கிணறு அமைப்பதாக கூறப்பட்டது. ஆனால், தோண்டப்பட்ட கிணற்றில் இருந்து, கொண்டு செல்லப்படும் தண்ணீர், தனியாருக்கு விற்பனை செய்வது தெரியவந்தது. இங்கிருந்து தண்ணீர் கொண்டு செல்வதால், கலிங்கியம் ஊராட்சி முழுவதுமே குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் எனக்கூறி, கடந்த வாரம் கோபியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் செங்கோட்டையனை கிராம மக்கள் முற்றுகையிட்டனர். அப்போது அவர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், இதுகுறித்து விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். இதைத்தொடர்ந்து நேற்று காலை 8 மணியளவில், ஈரோடு கலெக்டர் கதிரவன் சம்பந்தப்பட்ட கிணற்றை ஆய்வு செய்தார். பின்னர், ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என அங்கிருந்த மக்களிடம் கூறி சென்றார்.

கலெக்டரின் நடவடிக்கையில் ஏமாற்றமடைந்த மக்கள் சுமார் 500க்கும் மேற்பட்டோர் மண்வெட்டி, கடப்பாரையுடன் அங்கு வந்து ஏற்கனவே கிணறு தோண்டி அங்கு குவிக்கப்பட்டிருந்த மண்ணை மீண்டும் கிணற்றில் கொட்டி மூடினர். இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், `சின்னகுளம் பகுதியில் உள்ள குளம் தான் 10க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு குடிநீர் ஆதாரமாக உள்ளது. இந்நிலையில், இங்கு  கிணறு அமைத்து கெட்டி செவியூர் கிராமத்தில் தனியாருக்கு தண்ணீர் கொண்டு சென்றால் ஊராட்சி முழுவதுமே குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும்.இது குறித்து அமைச்சரிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. இந்நிலையில் நேற்று ஆய்வு செய்த கலெக்டரும் பேச்சுவார்த்தை நடத்தலாம் என கூறி சென்றார். மாவட்ட நிர்வாகமும் தனியாருக்கு ஆதரவாக உள்ளதால் நாங்களே கிணற்றை மூடுகிறோம்’ என்றனர்.

Tags : Kopi ,well , Kobe, water, people close to the well
× RELATED நடப்போம் நலம் பெறுவோம்’ திட்டம் மூலம்...