×

ஆந்திர சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று துவக்கம்

திருமலை: ஆந்திராவில் ஜெகன்மோகன் தலைமையிலான அரசு பதவியேற்ற பிறகு, முதல் முறையாக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. ஆந்திராவில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் அமோக வெற்றி பெற்று ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்தது. இதைத்தொடர்ந்து கடந்த மாதம் 30ம் தேதி மாநில முதல்வராக அக்கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி பதவியேற்றுக் கொண்டார். கடந்த 8ம் தேதி 5 துணை முதல்வர்கள் மற்றும் அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர். இந்நிலையில் புதிய அரசு பதவியேற்ற பிறகு மாநில சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது.

இந்த தொடரில் 175 சட்டப்பேரவைத் தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்ற  எம்எல்ஏக்களுக்கு தற்காலிக சபாநாயகர் வெங்கட அப்பல் நாயுடு பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார். புதிய சபாநாயகராக தம்மினேனி சீதாராம் தேர்ந்தெடுக்கப்பட்டு பதவி ஏற்க உள்ளார்.  14ம் தேதி  சட்டப்பேரவை மற்றும் சட்டமேலவையில் கவர்னர் உரையாற்ற உள்ளார். 15 மற்றும் 16ம் தேதி  சட்டப்பேரவைக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 17 மற்றும் 18ம் தேதி சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நடைபெற உள்ளது.

இதற்கிடையே, அமைச்சர் பதவி கிடைக்காததால் அதிருப்தியில் உள்ள நடிகை ரோஜா உட்பட 2 பேரை சமாதானம் செய்ய ஜெகன்மோகன் ரெட்டி அழைப்பு விடுத்துள்ளார். இதில் ரோஜாவுக்கு மகளிர் நல ஆணைய தலைவர் பதவி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அமைச்சரவையில் இடம் கிடைக்காததால் ரோஜா ஐதராபாத்தில் உள்ள வீட்டிலேயே தங்கியுள்ளார். கட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்பதையும் தவிர்த்து வந்தார். இந்நிலையில் ரோஜாவை சமாதானப்படுத்துவதற்காக கட்சியின் மூத்த தலைவரும் எம்பியுமான விஜய் சாய் ரெட்டி ரோஜாவுக்கும், மங்களகிரி தொகுதி எம்எல்ஏ ராமகிருஷ்ணா ரெட்டிக்கும் போன் செய்து ஜெகன்மோகன் ரெட்டியை சந்திக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். இதையடுத்து இருவரும் ஜெகன்மோகன் ரெட்டியை விரைவில் சந்திக்க உள்ளனர். இதில் ரோஜாவுக்கு மகளிர் நல ஆணைய தலைவர் பதவி தற்போது வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : session ,Andhra Assembly , Andhra Assembly session ,today begins
× RELATED வங்கியிலிருந்து அசல் ஆவணங்கள்...