×

இருகூர் முதல் தேவன்கொந்தி வரையிலான பெட்ரோல் குழாய் பதிக்கும் திட்டம் மத்திய அரசிதழில் வெளியீடு

* 7 மாவட்ட விவசாயிகள் கொந்தளிப்பு
* போராட்டம் தீவிரமாகும் என அறிவிப்பு

ஈரோடு: கோவை இருகூரிலிருந்து கர்நாடக மாநிலம் தேவன்கொந்தி வரை பெட்ரோல், டீசல் குழாய் பதிக்கும் திட்டம் குறித்து மத்திய அரசிதழில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். கோவை மாவட்டம் இருகூரில் இருந்து, கர்நாடக மாநிலம் தேவன்கொந்தி வரை பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேசன் சார்பில் பெட்ரோல், டீசல் ஆகியவை குழாய் மூலம் கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, விவசாய விளைநிலங்கள் வழியாக குழாய் பதிக்கவுள்ளது. இதனால், கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட 7 மாவட்டங்களில் உள்ள நூற்றுக்கணக்கான விவசாயிகளின் விளைநிலங்கள் பாதிக்கப்படுகிறது. இந்த திட்டத்தை மாற்றுப்பாதையில் கொண்டு செல்ல வேண்டும் என விவசாயிகள் கூட்டியக்கத்தினர் கோரி வந்தனர்.

இந்நிலையில், இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான அறிவிப்பு மத்திய அரசின் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் சார்பில் அரசிதழில் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, இத்திட்டத்தை நிறைவேற்றவும், விளைநிலங்கள் கொடுக்கும் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கும் பணிகளுக்காகவும் புஷ்பா என்ற அதிகாரியும் நியமிக்கப்பட்டுள்ளதாக அரசிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இத்திட்டம் எந்ததெந்த மாவட்டங்களில் விளைநிலங்கள் வழியாக கொண்டு செல்லப்பட உள்ளது என்பதை தெரிவிக்கும் வகையில் நிலங்களில் சர்வே எண், கையகப்படுத்தப்பட உள்ள நிலத்தின் அளவு உள்ளிட்டவைகளும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.

இதுகுறித்து, விவசாயிகள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பொன்னையன் கூறியதாவது:
தமிழகத்தின் மேற்கு மண்டலம் வழியாக கோவை-இருகூரில் இருந்து பெங்களூர்-தேவன்கொந்தி வரை பெட்ரோல், டீசல் கொண்டு செல்ல விளைநிலங்கள் வழியாக குழாய்கள் பதிக்க பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேசன் நிறுவனம் முடிவு செய்து திட்டம் செயல்படுத்தப்படுவது குறித்து மத்திய அரசிதழில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இத்திட்டத்தால் 7 மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகளின் விளைநிலங்கள் பாதிக்கப்படும். விவசாயிகளுக்கு எதிரான திட்டத்தை மட்டுமே மத்திய அரசு செயல்படுத்த துடிக்கிறது. இதற்கு தமிழக அரசும் துணை போகிறது. விவசாய குடும்பத்தை சேர்ந்த முதல்வர் என்று கூறிக்கொள்ளும் எடப்பாடி பழனிசாமி மத்திய அரசுக்கு துணைபோவது விவசாயிகளிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. பாதிக்கப்படும் விவசாயிகளை அழைத்து கருத்துக்களை கேட்டறிந்து விரைவில் தொடர் போராட்டங்களை மேற்கொள்ள உள்ளோம். இவ்வாறு பொன்னையன் கூறினார்.

Tags : Petrol pipeline project, from Ikur to Goddaghi
× RELATED அதிகபட்ச வெப்பத்தில் ஈரோடு 8-வது இடம்