×

கை விரலில் எலும்புமுறிவு உலக கோப்பையில் இருந்து விலகினார் ஷிகர் தவான்

லண்டன்: இந்திய அணி தொடக்க வீரர் ஷிகர் தவானுக்கு இடது கை கட்டைவிரலில் எலும்புமுறிவு ஏற்பட்டதை அடுத்து உலக கோப்பை தொடரில் இருந்து விலகியுள்ளார். அவருக்கு பதிலாக அதிரடி விக்கெட் கீப்பர்/பேட்ஸ்மேன் ரிஷப் பன்ட் சேர்க்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக கடந்த 9ம் தேதி லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்த லீக் ஆட்டத்தின்போது, பவுன்சர் பந்து தாக்கியதில் தவானுக்கு காயம் ஏற்பட்டது. அதை பொருட்படுத்தாமல் தொடர்ந்து விளையாடிய அவர், 117 ரன் விளாசி இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார். ஆட்ட நாயகன் விருதும் அவருக்கே கிடைத்தது. இந்திய அணி பீல்டிங்கின்போது களமிறங்காமல் ஓய்வெடுத்த தவானுக்கு நேற்று ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட்டது. அதில் இடது கை கட்டைவிரலில் எலும்புமுறிவு ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டது. இந்த காயம் முழுவதுமாக குணமடைய குறைந்தபட்சம் 3 வாரங்கள் தேவைப்படும் என்பதால், உலக கோப்பையில் இருந்து தவான் விலகுவதாக அறிவிக்கப்பட்டது. இது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவை கொடுத்துள்ளது.

இந்த நிலையில், தவானுக்கு பதிலாக அதிரடி பேட்ஸ்மேனும், விக்கெட் கீப்பருமான ரிஷப் பன்ட் (21 வயது) இங்கிலாந்து செல்ல உள்ளதாக பிசிசிஐ வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. பன்ட், அம்பாதி ராயுடு இருவரது பெயரும் பரிசீலனை செய்யப்பட்ட நிலையில், அடுத்த 2 நாட்களுக்குள்ளாக பன்ட் இந்திய அணியுடன் இணைந்து கொள்வார் என பிசிசிஐ நிர்வாகி ஒருவர் தெரிவித்தார். தற்போது 4வது வீரராகக் களமிறங்கி வரும் லோகேஷ் ராகுல், ரோகித்துடன் இணைந்து இன்னிங்சை தொடங்க உள்ளார். நடுவரிசையில் ரிஷப் பன்ட் களமிறங்க வாய்ப்பு உள்ளது. இந்திய அணி தனது 3வது லீக் ஆட்டத்தில் நாளை நியூசிலாந்தை எதிர்கொள்கிறது. அடுத்து இந்தியா - பாகிஸ்தான் மோதும் பரபரப்பான லீக் ஆட்டம் மான்செஸ்டரில் 16ம் தேதி நடக்கிறது. அந்த போட்டியில் பன்ட் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : Shikhar Dhawan ,World Cup , Shikhar Dhawan left, World Cup
× RELATED 2022 கத்தார் உலகக்கோப்பை கால்பந்து...