×

சென்னை மாநகராட்சியில் வார்டு மறுவரையறை செய்ததில் திட்டமிட்டு குளறுபடி : திமுக பரபரப்பு குற்றச்சாட்டு

சென்னை: சென்னை மாநகராட்சியில் வார்டு மறுவரையறை செய்ததில்  திட்டமிட்டு குளறுபடிகள் நடைபெற்றுள்ளதாக சென்னை மாநகராட்சி முன்னாள் மேயரும், எம்எல்ஏவுமான மா.சுப்பிரமணியன் குற்றம் சாட்டியுள்ளார். உள்ளாட்சி தேர்தலுக்கான பணிகளை மாநில தேர்தல் ஆணையம் செய்துவருகிறது. வாக்காளர் பட்டியல் தயார் செய்தல், வாக்குச்சாவடிகள் அமைத்தல் உள்ளிட்ட பணிகளை செய்வது தொடர்பாக மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது. மாநகராட்சிகளில் ஒரு வார்டில் 1400 வாக்காளர்கள் இருந்தால்  ஒரே ஒரு வாக்குச்சாவடியும், 1400 முதல் 2800 வாக்காளர்கள் இருந்தால் இரண்டு வாக்குச்சாவடியும், 2800 முதல் 4200 வாக்காளர்கள் இருந்தால் 3 வாக்குச்சாவடிகளும் அமைக்க வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி சென்னை மாநகராட்சியில் வரைவு வாக்குச்சாவடி பட்டியல் தயார் செய்யும் பணியில் மாநகராட்சி ஈடுபட்டது. இந்த பணிகள் முடிந்து வரைவு வாக்குச்சாவடி பட்டியல் நேற்றுமுன்தினம் பொதுமக்கள் பார்வைக்காக ரிப்பன் மாளிகை, அனைத்து மண்டல அலுவலர்கள், வார்டு அலுவலகங்கள், வாக்காளர் பதிவு அலுவலகங்கள் உள்ளிட்ட இடத்தில் வைக்கப்பட்டுள்ளது.

சென்னையில் மொத்தம் 5,720 வாக்குச்சாவடிகள் உருவாக்கப்பட்டுள்ளது. ஆண்களுக்கு 72 வாக்குச்சாவடிகளும், பெண்களுக்கு 72 வாக்குச்சாடிகளும், ஆண், பெண் என அனைத்து வாக்காளர்களையும் சேர்த்து 5,564 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வரைவு வாக்குச்சாவடி பட்டியல் தொடர்பாக அனைத்து கட்சிகளின் ஆலோசனை கூட்டம் ரிப்பன் மாளிகையில் நேற்று நடந்தது. மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் துணை ஆணையர்கள் மதுசுதன் ரெட்டி, திவ்யதர்ஷினி, ஸ்ரீதர், வருவாய் அலுவலர் சுகுமார், சிட்டி பாபு ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில், அதிமுக பிரதிநிதிகளாக பாலகங்கா, ராஜேஷ், வெங்கடேஷ் பாபு ஆகியோரும், திமுக தரப்பில் சட்டமன்ற உறுப்பினர்கள் மா.சுப்பிரமணியன், ஆர்.டி.சேகர், அரவிந்த் ரமேஷ் உள்ளிட்ட பல்வேறு அங்கீகரிக்கப்பட்ட கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
இதில், உள்ளாட்சி தேர்தலுக்கான வரைவு வாக்குச்சாவடி பட்டியல் தொடர்பாக அனைத்து கட்சிகள் உடன் ஆணையர் விரிவான ஆலோசனை நடத்தினார். மேலும், அவர்களின் கோரிக்கைகளை கடிதமாக அளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். அந்த கடிதத்தை பரிசீலனை செய்து இறுதி வாக்குச்சாவடி பட்டியல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த கூட்டத்திற்கு பிறகு திமுக எம்எல்ஏ மா.சுப்பிரமணியன் கூறியதாவது: சென்னை மாநகராட்சியில் வார்டுகளை மறுவரையறை செய்ததிலும், வார்டு இட ஒதுக்கீட்டு அடிப்படையில் பிரித்ததிலும் பல்வேறு குழப்பங்கள் நிலவுகிறது என்பது தொடர்பாக கூட்டத்தில் பதிவு செய்துள்ளோம். 2010-11ம் ஆண்டுதான் 174 சதுர கி.மீ பரபரப்பளவுள்ள சென்னை மாநகராட்சியை 426 சதுர கி.மீ பரப்பளவுள்ள மாநகராட்சியாக மாற்றி அமைத்து, 8 நகராட்சிகள், 9 பேரூராட்சிகள், 25 ஊராட்சிகள் உடன் இணைக்கப்பட்டுள்ளது. அப்படி இணைக்கப்ட்ட போது பழைய சென்னை மாநகராட்சி வார்டு 155. அது, 107 வார்டாக சுருக்கப்பட்டது. திருவள்ளூர் மாவட்ட பகுதிகளில் இருந்து சென்னை மாநகராட்சியோடு இணைக்கப்பட்ட பகுதிகளில் 61 வார்டுகளும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து சென்னை மாநகராட்சியோடு இணைக்கப்பட்ட பகுதிகளில் 32 வார்டுகளையும் இணைத்து தான் 200 வார்டுகள் என்கிற வகையில் சென்னை பெருநகர மாநகராட்சி உருவாக்கப்பட்டது.

அப்படி உருவானதற்கு பிறகு தான் 2011ல் தேர்தல் நடைபெற்றது. ஆனால், திடீரென்று 2016ல் பெண்களுக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு என்று அறிவித்து, 200 வார்டுகளில் எந்தெந்த வார்டு பெண்களுக்கு உரியது, எந்தெந்த வார்டு ஆண்களுக்கு உரியது என்பது குறித்து அறிவிப்பு வெளியானது.
கடந்த 2016 அக்டோபரில் உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பு வெளிவந்தது. அப்போது  ஆண்கள், பெண்கள், தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஒதுக்கீடு என்ற அடிப்படையில் விண்ணப்பங்கள் பெறப்பட்டது. வேட்பு மனு பரிசீலனை வரை சென்ற நேரத்தில் திடீரென்று தேர்தல் தள்ளி வைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியானது. அதன்பிறகு வார்டு மறுவரையறை என்றார்கள். 2011ல் மறு வரையறை செய்து தான் சென்னை மாநகராட்சி 155 வார்டுகள் 107 வார்டாக குறைக்கப்பட்டது. திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட பகுதிகளில் இருந்து வார்டுகள் சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டது. 65 வார்டுகளை கொண்ட திருச்சி 100 வார்டாக மாற்றப்பட்டது. மதுரையும் 120 வார்டுகளை கொண்ட மாநகராட்சியாக மாற்றப்பட்டது. 7 ஆண்டுகளுக்கு முன்னர் வார்டுகளை மறுவரையறை செய்து பெரிய மாநகராட்சியாக மாற்றிய பிறகு மீண்டும் மறுவரையறை செய்வது ஏன் என்று நான் சட்டசபையில் கேட்டேன்.

அதற்கு பதில் இல்லை. அதே தான் இந்த மாநகராட்சி நிர்வாகமும் செய்தது. சோழிங்கநல்லூர் தொகுதியில் மடிப்பாக்கம் 188வது வார்டாக உள்ளது. அந்த வார்டு ஆண்கள் பொது வார்டாக 2011ல் தேர்தல் நடந்தது. இப்போது அந்த வார்டு பெண்கள் எஸ்சி வார்டாக மாற்றப்பட்டுள்ளது. ஆண்கள் வார்டு பெண்கள் வார்டாக மாற்றி, ரிசர்வேஷன் வார்டாக மாற்றப்பட்டுள்ளது. சைதாப்பேட்டையில் 7 வார்டுகளில் 6 ஆண்கள் மற்றும் 1 பெண் வார்டும் இருந்தது. தற்போது 5 பெண்கள், 2 ஆண்கள் வார்டாக மாற்றப்பட்டுள்ளது. ராயபுரத்தில் 6 வார்டுகளும் பெண்கள் வார்டாக மாறியுள்ளது. நாங்கள் மாநகராட்சி ஆணையர் இடத்தில் எந்த அடிப்படையில் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்று கேட்டோம். எந்தவகையில் வார்டுகள் மாற்றப்பட்டுள்ளது என்கிற கணக்கெடுப்பை காட்டி விட்டு அதன்பிறகு வாக்குச்சாவடி பற்றிய பேச்சு எடுத்து கொள்ளலாம் என்றோம். அது தொடர்பாக கடிதமும் கொடுத்துள்ளோம். பல்வேறு இடங்ளில் குடிசை பகுதிகளில் வசித்து வந்தவர்கள் செம்மஞ்சேரி, பெரும்பாக்கம், எழில்நகர், கண்ணகி நகருக்கு மாற்றப்பட்டுள்ளனர். அவர்களுக்கு சென்னையிலும் வாக்கு இருக்கிறது. அங்கேயும் வாக்கு இருக்கிறது. இரட்டை வாக்குரிமை பெற்றவர்களை என்ன செய்ய போகிறீர்கள். முதலில் வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்து விட்டு, இட ஒதுக்கீடு அடிப்படையில் வார்டுகளை பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை தெரிவித்துள்ளோம்.

வார்டுகளை பிரிப்பதில் பாலின குளறுபடி, ஜாதி வாரியான குளறுபடி போன்ற பல்வேறு குளறுபடிகள் உள்ளது. மேலும், இது அனைத்தும் திட்டமிட்டு நடத்தப்படுகிறதா என்ற சந்தேகம் தங்களுக்கு இருந்ததால், மாநகராட்சி ஆணையரிடம் எதன் அடிப்படையில் இந்த மறுவரையறை செய்யப்பட்டுள்ளது என்ற விளக்கத்தை கேட்டுள்ளோம். அவர் இது தொடர்பான முழு விவரமும் அனைத்து கட்சி அலுவலகங்களுக்கு அனுப்பப்படும் என உறுதியளித்துள்ளார். மேலும், மறுவரையறை செய்யப்படும் முன்பே அனைத்து கட்சிகளுடனுன் மாநகராட்சி ஆலோசித்து இருக்க வேண்டும். மாநகராட்சி தரப்பில் முழு விளக்கத்தை பெற்ற பிறகே வார்டுகளின் மறுவரையறை தொடர்பாக ஆலோசிக்க முடியும்.இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறும்போது, எல்லைகள் விரிவாக்கம் காரணமாக மக்கள் தொகையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாகவே வார்டுகள் மறுவரையறையில் சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. மேலும், முதற்கட்ட ஆலோசனை மட்டுமே நடந்துள்ளது. தொடர்ந்து பலகட்ட ஒரு கூட்டங்கள் நடக்கவுள்ளது. அதன் தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும், என்றார்.

எத்தனை வாக்குச்சாவடி


2011ல் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலுக்காக 4,876 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தது. இதில், தலா 1384 வாக்குச்சாவடிகள் ஆண்களுக்கும், பெண்களுக்கும், 2108 வாக்குச்சாவடிகள் ஆண், பெண் என அனைத்து தரப்பினருக்கும் அமைக்கப்பட்டிருந்தது. 2016ம் ஆண்டு நடைபெறவிருந்த உள்ளாட்சி தேர்தலுக்கு 5,211 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தது. தலா 160 வாக்குச்சாவடிகள் ஆண்கள் மற்றும் பெண்களுக்கும், 5,211 வாக்குச்சாவடிகள் அனைத்து தரப்பினரும் வாக்களிக்கும் படி அமைக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : corporation ,reorganization ,Chennai ,DMK , Disorganized, corporation's reorganization ,Chennai corporation
× RELATED சென்னை, கோவை மாநகராட்சி டெண்டர்...