×

ஆவடி நகராட்சியில் தூர்ந்து கிடக்கும் மழைநீர் கால்வாய்களை சீரமைப்பதில் மெத்தனம்

ஆவடி: மழைக்காலம் தொடங்க உள்ள நிலையில், ஆவடி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தூர்ந்து கிடக்கும் மழைநீர் கால்வாய்களை தூர்வாரி சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை, என ெபாதுமக்கள் குற்றம்சாட்டி உள்ளனர். ஆவடி நகராட்சியில் ஆவடி, திருமுல்லைவாயில், அண்ணனூர், கோவில்பாதாகை, முத்தாபுதுப்பேட்டை, மிட்டினமல்லி, பட்டாபிராம் ஆகிய பகுதிகள் உள்ளன. இங்கு  48 வார்டுகளில் சுமார் 4 லட்சத்திற்கும் மேல் மக்கள் வசிக்கின்றனர். மேற்கண்ட பகுதிகளில் மழை காலங்களில் மழைநீர் தங்கு தடையின்றி வெளியேற பல ஆண்டுகளுக்கு முன் கால்வாய்கள் அமைக்கப்பட்டன. இவை அனைத்தும் திறந்தவெளி கால்வாய் ஆகும். மேற்கண்ட  கால்வாய்களில் கடந்த சில ஆண்டுகளாக வீடுகள், வர்த்தக நிறுவனங்களில் இருந்து வெளியேறும் கழிவு நீரை வெளியேற்றி வருகின்றனர். இதனால் காலபோக்கில் மழைநீர் கால்வாய் பல இடங்களில் கழிவுநீர் கால்வாயாக  மாறிவிட்டது.

திறந்தவெளி கால்வாய் என்பதால் குப்பை  கழிவுகள் விழுந்து பல இடங்களில் கால்வாய்களில்  அடிக்கடி அடைப்பு ஏற்பட்டு தண்ணீர் செல்ல முடியவில்லை. இதனால், கால்வாயில் இருந்து கழிவுநீர் வெளியேறி முக்கிய சாலைகள், தெருக்களில் ஓடுகிறது. குறிப்பாக, திருமுல்லைவாயால், சி.டி.எச் சாலை, கல்லறை தோட்டம், சோழம்பேடு சாலை, மணல் ஓடை தெரு உள்ளிட்ட பகுதியில் கழிவுநீர் வெளியேறி சாலையில் ஓடுகிறது. மேலும், சிறு மழை பெய்தால் கூட கால்வாயில்  தண்ணீர் நிறைந்து விடும். இதனால், மழை நீரும், கழிவு நீரும் கலந்து கால்வாய்களில் இருந்து வெளியேறி  சாலையில் ஓடும்.  இதன் காரணமாக வாகன ஓட்டிகள், பாதசாரிகள் அவதிப்பட்டு செல்லும் நிலை உள்ளது. இவ்வாறு ஒவ்வொரு மழை காலத்திலும் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும், மேற்கண்ட பகுதிகளில் திறந்தவெளி கால்வாய்களில்  தேங்கி நிற்கும் கழிவு நீரில் கொசுக்கள் உற்பத்தியாகிறது. இந்த கொசுக்கள் பொதுமக்களை கடிப்பதால், பொதுமக்களுக்கு மலேரியா உள்ளிட்ட மர்ம  காய்ச்சல்கள் பரவி வருகிறது.

இதுபற்றி பொது நலச்சங்கங்கள் சார்பில் பலமுறை நகராட்சி அதிகாரிகளுக்கு புகார் அனுப்பியும் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியமாக உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘‘ஆவடி நகராட்சி பகுதிகளில் உள்ள மழைநீர் கால்வாய்கள் பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி தூர்ந்துள்ளன. இதனால், மழைக்காலங்களில் தண்ணீர் வெளியேற முடியாமல் வீடுகளை சூழ்கிறது. பல ஆண்டாக இந்த பிரச்னை இருந்தும், அதிகாரிகள் கால்வாயை தூர்வாரி முறையாக பராமரிப்பதில்லை. இந்தாண்டு மழைக்காலம் தொடங்கும் முன்பு தூர்ந்துள்ள மழைநீர் கால்வாய்களை தூர்வாரி சீரமைக்க வேண்டும், என அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக உள்ளனர். எனவே, நகராட்சி  உயர் அதிகாரிகள் கவனித்து ஆவடி பகுதிகளில் உள்ள மழைநீர் கால்வாய்களை தூர்வாரவும், முறையாக பராமரிக்கவும்  உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றனர்.

Tags : municipality ,Avadi , Avadi is dumped , municipality
× RELATED புகழூர் நகராட்சி பகுதியில் காவிரி குடிநீர் தட்டுப்பாடு இல்லை