×

மின்வாரிய உதவி பொறியாளர் காலிப்பணியிடங்களுக்கு வெளிமாநிலத்தவர் நியமனம் இறுதி தீர்ப்பை பொறுத்தது: ஐகோர்ட் உத்தரவு

மதுரை: மின்வாரிய உதவிப்பொறியாளர் காலியிடத்துக்கு வெளிமாநிலத்தவர்கள் தேர்வானதை ரத்து செய்யக்கோரிய வழக்கில், நியமனங்கள் இறுதி தீர்ப்பை பொறுத்தது என ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், திருவாப்பூரைச் சேர்ந்த சத்தியமூர்த்தி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், தமிழ்நாடு மின் பகிர்மானம் மற்றும் கட்டுமான கழகத்தின் சார்பில் பல்வேறு பிரிவுகளில் காலியாகவுள்ள உதவிப்பொறியாளர் பணியிடங்களில் வெளிமாநிலத்தைச் சேர்ந்த பலர் தேர்வானோர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

இதனால் உயரதிகாரிகளை உடனடியாக சந்தித்து இட ஒதுக்கீட்டு முறையை பின்பற்றியே பணியிடங்கள் நிரப்ப கோரிக்கை வைத்தோம். ஆனால், அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. இதுதொடர்பான வழக்கில் எங்களது கோரிக்கையை பரிசீலிக்க ஏப்.27ல் ஐகோர்ட் உத்தரவிட்டிருந்தது. இதையும் அவர்கள் கண்டுகொள்ளவில்லை. எனவே, உதவிப்பொறியாளர் பணிக்கு தேர்வானவர்களின் பட்டியலை ரத்து செய்து, இடஒதுக்கீடு முறையை பின்பற்றி புதிதாக தேர்வு பட்டியலை வெளியிட உத்தரவிட வேண்டும். எனக்காக ஒரு பணியிடத்தை காலியாக வைத்திருக்கவும் உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி டி.கிருஷ்ணகுமார் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் அஜ்மல்கான், ‘‘இட ஒதுக்கீட்டு முறை பின்பற்றவில்லை. இதனால் வெளிமாநிலத்தை சேர்ந்த பலர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்’’ என்றார். இதையடுத்து நீதிபதி, மனுவிற்கு மின்பகிர்மான கழக தலைமை பொறியாளர் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். வழக்கில் எதிர்மனுதாரர்களாக சேர்க்கப்பட்டுள்ள உதவிப்பொறியாளர் தேர்வானவர்கள் பட்டியலில் உள்ள வெளி மாநிலத்தவருக்கு நோட்டீஸ் அனுப்பவும், இந்த பணி நியமனங்கள் அனைத்தும் வழக்கின் முடிவில் பிறப்பிக்கப்படும் இறுதி தீர்ப்பை பொறுத்தது எனவும் உத்தரவிட்டு விசாரணையை 2 வாரம் தள்ளி வைத்தார்.

Tags : Electricity Assistant Engineer , Electricity Assistant Engineer, Galle, External Resident, Appointment, Court
× RELATED மின்வாரிய உதவி பொறியாளர் பணியிட...