×

அதிமுக தோல்விக்கு பாஜகவே காரணம்: செய்யாறு எம்எல்ஏ, முன்னாள் அமைச்சர் குற்றச்சாட்டு

சென்னை: மக்களவை தொகுதியில் அதிமுக தோல்விக்கு கூட்டணி கட்சிகளின் ஒத்துழைப்பின்மையே காரணம் என்று செய்யாறு அதிமுக எம்எல்ஏவும், பாஜகதான் காரணம் என்று அதிமுக அமைப்பு செயலாளரும் முன்னாள் அமைச்சருமான செல்லபாண்டியனும் குற்றம்சாட்டி பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் 38 மக்களவை தொகுதிகள் மற்றும் 22 சட்டமன்ற தொகுதிகளில் இடைத்தேர்தல் நடந்தது. இதில் அதிமுக ஒரு மக்களவை தொகுதியிலும், 9 சட்டமன்ற தொகுதிகளிலும் வெற்றி பெற்றது.

மக்களவை தேர்தலிலும், சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலிலும் பாஜகவுடன் கூட்டு வைத்ததே அதிமுக தோல்விக்கு காரணம் என அதிமுக தலைவர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் விளாத்திகுளத்தில் நேற்று முன்தினம் இரவு அதிமுக நன்றி அறிவிப்பு கூட்டம் அமைச்சர் கடம்பூர் ராஜு தலைமையில் நடந்தது. இதில் முன்னாள் அமைச்சரும், அதிமுக அமைப்பு செயலாளருமான செல்லபாண்டியன் பேசுகையில், தமிழகத்தில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்ததற்கான காரணம் சின்ன குழந்தையை கேட்டால் கூட கூறிவிடும், பாஜவுடன் கூட்டணி வைத்ததுதான் என்று.

இது இயற்கை தான். தனித்து நின்றிருந்தால் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருப்போம். இதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை என்றார். அமைச்சர் முன்னிலையில், முன்னாள் அமைச்சர் செல்லபாண்டியன், அதிமுகவின் தோல்விக்கு கூட்டணி கட்சியான பாஜ தான் காரணம் என்று பேசியது சலசலப்பை ஏற்படுத்தியது. எம்எல்.ஏ பேச்சு: திருவண்ணாமலை வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் செய்யாறு ஒன்றியம் மற்றும் நகர அதிமுக உறுப்பினர்களுக்கு உறுப்பினர் அட்டை வழங்கும் விழா செய்யாறில் நேற்று நடந்தது.

மாவட்ட அதிமுக செயலாளர் தூசி கே.மோகன் எம்.எல்.ஏ தலைமை வகித்து பேசியதாவது: நடந்து முடிந்த மக்களவை தேர்லில் அனைவரும் நன்றாக உழைத்தீர்கள். நமது மாவட்டத்தை பொறுத்த வரையில் யாரும் ஏமாற்றாமல் ஒவ்வொருவரும் எந்த அளவிற்கு உழைத்தீர்கள் என்பது எனக்கு தெரியும். கடந்த மக்களவை தேர்தலில், தேர்தல் நாளன்று கிட்டத்தட்ட 110 பூத்களில் பார்வையிட சென்றேன். நமது கட்சி நிர்வாகிகளை தவிர கூட்டணி கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் யாரையும் பார்க்க முடியவில்லை. கூட்டணி கட்சியினரின் ஒத்துழைப்பு கிடைக்காததே ஆரணி மக்களவை தொகுதி தோல்விக்கு காரணம். இவ்வாறு அவர் பேசினார்.

Tags : AIADMK ,Kairam MLA , AIADMK defeat, BJP, cause, MLA, former minister, accusation
× RELATED அதிமுக குறித்தோ, எடப்பாடி பழனிசாமி...