×

உபியில் இருந்து ரயிலில் திரும்பியபோது வெயில் கொடுமைக்கு தமிழக பக்தர்கள் 4 பேர் பரிதாப பலி

ஜான்சி: ஆன்மிக சுற்றுலா சென்றுவிட்டு உத்தரப்பிரதேசத்தில் இருந்து கோயம்புத்தூர் திரும்பிக்கொண்டிருந்த தமிழக பக்தர்கள் 4 பேர் வெயிலின் தாக்கத்தை தாங்க முடியாமல் கேரளா எக்ஸ்பிரஸ் ரயிலிலேயே உயிரிழந்தனர். நாடு முழுவதும் தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. அனல் காற்று வீசுவதால் பொதுமக்கள் மிகுந்த சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களில் வெயில் மக்களை வாட்டி வதைத்து வருகின்றது. குறிப்பாக உத்தரப்பிரதேசத்தின் பண்டல்காண்ட்டில் உள்ள ஜான்சியில் 113 டிகிரிக்கும் அதிகமாக வெயில் கொளுத்தி வருகின்றது.  

கோவை மற்றும் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து 70வயதுக்கு மேற்பட்ட 68 பேர் கொண்ட குழுவினர் வாரணாசி மற்றும் ஆக்ராவிற்கு ரயில் மூலம் சுற்றுலா சென்றனர். அங்கு சுற்றுலாவை முடித்துவிட்டு அனைவரும் ஆக்ராவில் இருந்து கோவைக்கு வர டெல்லி முதல் திருவனந்தபுரம் வரை செல்லும் கேரளா எக்ஸ்பிரஸ் ரயிலில் சாதாரண படுக்கை வசதி எஸ் 8, எஸ்9 பெட்டிகளில் பயணம் செய்தனர். அவர்களின் ரயில் ஜான்சி ரயில் நிலையம் வந்த போது அப்பகுதியில் கடும் அனல்காற்று வீசியதாக கூறப்படுகிறது. மேலும் அப்பகுதியில் வெயில்113 டிகிரிக்கும் மேல் இருந்துள்ளது. இதனால் வெப்பத்தை தாக்குபிடிக்க முடியாமல் பலருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் கோவை மற்றும் குன்னூரை சேர்ந்த 3 பேர் பரிதாபமாக ரயிலிலேயே உயிரிழந்ததும், ஒருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்ததாகவும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்களில் இருவர் நீலகிரி மாவட்டம் குன்னூர் ஓட்டுப்பட்டரையை சேர்ந்த சுப்பைய்யா வயது (88) ஓய்வு பெற்ற தாசில்தார், மற்றும் அவரது உறவினர் பாலகிருஷ்ணன் வயது (70) மாவட்ட கல்வி அலுவலகத்தில் கண்காணிப்பாளராக பணியாற்றி ஓய்வுபெற்றவர், மீதமுள்ள இருவரும் கோவை உப்பிலிபாளையத்தை சேர்ந்த தனலட்சுமி (74), பச்சையா (80) என்பதும் தெரியவந்தது. மேலும் சிலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரேதபரிசோதனைக்குப்பின் சிறப்பு சரக்கு ரயில் மூலம் 4 பேரின் சடலங்களும் கோயம்புத்தூர் அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து வடக்கு மத்திய ரயில்வே ஜான்சி டிவிஷன் மக்கள் செய்தி தொடர்பாளர் மனோஜ்குமார் சிங் கூறுகையில், “ கடும் வெயிலின் தாக்கத்தை அடுத்து ரயில் நிலையங்களில் பயணிகள் குடிப்பதற்கு தண்ணீர் வழங்குவது உட்பட பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. ரயிலில் வந்த 4 பயணிகளின் பிரேத பரிசோதனை அறிக்கைக்காக காத்திருக்கிறோம். பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே இறந்ததற்கான உண்மையான காரணம் தெரியவரும்” என்றார்.


Tags : pilgrims ,devotees ,Tamil Nadu ,Ufai , Uyayil, Veil cruelty, Tamil devotees, 4 people, pity
× RELATED சித்திரை திருநாளை முன்னிட்டு...