×

குடிநீருக்காக வயதானவர்கள் கதறியழும் கொடுமை ஒரு கிராம் தங்கம் விலையை தாண்டிய டேங்கர் லாரிகளின் தண்ணீர் விற்பனை


* மாற்றுவழிகள் படுதோல்வி
* தலையை பிய்த்துக் கொள்ளும் குடிநீர் வாரியம்

சென்னை: மாற்று வழிகள் அனைத்தும் கைவிட்டு விட்டதால் அடுத்த கட்ட வழி என்ன என்பது குறித்து சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். தனியார் டேங்கர் லாரி தண்ணீர் ஒரு கிராம் தங்கம் விலையை தாண்டி செல்வது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் எப்போதும் இல்லாத அளவுக்கு தண்ணீர் பிரச்னை உச்சத்தில் உள்ளது. எங்கு பார்த்தாலும் தண்ணீர் கிடைக்காமல் மக்கள் குடங்களை தங்கள் வாகனங்களில் கட்டிக் கொண்டு அலைகின்றனர். சிலர் வீடுகளை மாற்றிக் கொண்டு சென்றுவிட்டனர்.

அந்த அளவுக்கு தண்ணீர் என்பது சென்னை மக்களுக்கு கிடைக்காத ஒரு அரிய பொக்கிஷமாக மாறிவிட்டது. சென்னைக்கு தண்ணீர் கிடைக்கக்கூடிய நீர் ஆதாரங்கள் ஒவ்வொன்றாக வறண்டுவிட்டது. சென்னைக்கு குடிநீர் வழங்கக் கூடிய ஏரிகளான புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஏரிகள் தண்ணீர் இல்லாமல் வறண்டு விட்டன. அதிலிருந்து தண்ணீர் எடுப்பதை சென்னை குடிநீர் வாரியம் நிறுத்திவிட்டது. பூண்டி ஏரியில் மட்டும் நேற்றைய நிலவரப்படி 34 மில்லியன் கன அடி தண்ணீர் மட்டுமே உள்ளது. அதுவும் சேறும் சகதியுமாக உள்ளது.

அந்த தண்ணீரையும் இன்று வரை எடுத்து வந்து சுத்திகரித்து சென்னை மக்களுக்கு வழங்கி வருகின்றனர். இங்கும் சில நாட்களில் தண்ணீர் எடுப்பது நிறுத்தப்படும். இதுதவிர கல்குவாரிகளில் இருந்து தொடர்ந்து தண்ணீர் எடுக்கப்பட்டதால் அதுவும் குறைந்துவிட்டது. இதனால் சென்னை மக்களுக்கு எப்படி, எங்கிருந்து தண்ணீர் வழங்குவது என்று தெரியாமல் சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் விழிபிதுங்கி வருகின்றனர். எங்கெல்லாம் தண்ணீர் இருக்கிறதோ அங்கிருந்து  தண்ணீர் எடுக்கவும் ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகிறது.

பயன்படுத்தாத நீர்நிலைகளில் தேங்கி கிடக்கக்கூடிய தண்ணீரை எடுத்து சுத்திகரித்து தற்காலிகமாக பிரச்னையை சமாளிக்கும் நடவடிக்கையில் சென்னை குடிநீர் வாரியம் இறங்கியுள்ளது. அதை வைத்து ஒரு சில நாட்களையாவது சமாளிக்கலாம் என்றும்  திட்டமிட்டுள்ளனர். இதுதவிர சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஆழ்துளை கிணறுகள் மற்றும் விவசாய கிணறுகளில் இருந்தும் தண்ணீர் எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக பல கிணறுகள் வாடகை அடிப்படையில் எடுக்கப்பட்டுள்ளது.

அதிலிருந்தும் போட்டி போட்டு தண்ணீர் எடுத்து வருவதால் நிலத்தடி நீர்மட்டம் அதல பாதாளத்துக்கு சென்று விட்டது. எனவே கடல் நீர் உள்புகும்  அபாயம் ஏற்பட்டுள்ளதால், நிலத்தடி நீரை உறிஞ்சி எடுக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் அங்கிருந்தும் தண்ணீர் எடுப்பது சென்னை குடிநீர் வாரியத்துக்கு பெரும் சவாலாக உள்ளது. இப்படி மாற்று வழிகள் மூலம் தண்ணீர் பஞ்சத்தை சமாளித்து விடலாம் என கணக்கு போட்ட குடிநீர் வாரிய அதிகாரிகளுக்கு ஒவ்வொரு திட்டமும் கைவிட்டு போய்க் கொண்டிருப்பது பெரும் தலைவலியை உருவாக்கியுள்ளது.

இதனால் லாரிகள் மூலமும் தண்ணீரை முறையாக வழங்க முடியாமல் சென்னை குடிநீர் வாரியம் திணறி வருகிறது. லாரி தண்ணீர் எப்போது வரும் என்று மணிக்கணக்கில் குடங்களுடன் காத்து கிடக்கின்றனர். முறையாக தண்ணீர் வழங்க முடியாததால் பொதுமக்கள் அந்தந்த பகுதிகளில் உள்ள மண்டல அலுவலங்களை முற்றுகையிட தொடங்கியுள்ளனர். ‘எவ்வளவு  பணம் கொடுக்கவும் தயார். தண்ணீரை தாருங்கள்’ என்று குடிநீர் வாரிய அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சிலர் குளித்து  நான்கு நாட்கள் ஆகிறது. உடம்பு நாற்றம் எடுக்கிறது. துணிகளை துவைத்தே ஒரு  வாரத்துக்கு மேல் ஆகிறது.

எனவே, தண்ணீர் கொடுங்கள் என்று கெஞ்சும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். வயதானவர்கள் தண்ணீர் கிடைக்காமல் அழுவதை இந்த நூற்றாண்டில் சென்னை இப்போதுதான் கண்டிருக்க முடியும். அவர்களை சமாளித்து அனுப்புவதற்குள் அதிகாரிகள் ஒரு வழி ஆகிவிடுகின்றனர். இதற்கிடையே, தனியார் லாரி தண்ணீர் விலையோ பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ‘வேண்மென்றால் வாங்குங்கள் இல்லையென்றால் விட்டுவிடுங்கள்’ என்று சொல்லும் அளவுக்கு அவர்களுக்கு கடும் கிராக்கி நிலவி வருவதால் அவர்கள் என்ன விலை சொன்னாலும் போட்டி போட்டு வாங்கும் நிலைக்கு பொதுமக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

இதனால் ஒரு கிராம் தங்கம் (நேற்றைய விலை ரூ. 3097) விலையை தாண்டி, தங்கம் போல லாரி தண்ணீர் விலையும் உச்சத்தை தொட்டு வருகிறது. சென்னையில் குளிப்பதற்கும், வீட்டு உபயோகத்துக்கு தண்ணீர் கிடைக்காமல் மக்கள் தர்மசங்கடத்தில் தத்தளித்து வருகின்றனர். எனவே, குடிநீர் பிரச்னை போய் தற்போது பிற தேவைகளுக்கான தண்ணீர் பிரச்னை பெரிய அளவில் வெடிக்க தொடங்கியுள்ளது. இது தொடர்ந்தால் சென்னை ஸ்தம்பிக்கும், மக்கள் இல்லாத  சென்னையாக விரைவில் மாறும் நிலை ஏற்படலாம். எனவே, தண்ணீர் தேவையை பூர்த்தி செய்வதன் மூலமே மக்கள் இடமாற்றத்தை தடுக்க முடியும். அடுத்ததாக தண்ணீருக்கு என்ன செய்யலாம் என்று ஆலோசிக்க தொடங்கியுள்ளனர். ரயில் மூலம் தண்ணீர் கொண்டு வரலாமா? என்பது போன்ற அடுத்த கட்ட வழிகளை நோக்கி சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் தேடி அலைந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Tags : Old people, kidnapping, gram gold price, passenger, tanker truck, water for sale
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை சமூகநீதி...