×

கன்னியாகுமரி கடலில் கலக்கும் கழிவுகள் ஒரு மாதத்தில் நிறுத்தப்படும்: பேச்சுவார்த்தையில் உடன்பாடு

கன்னியாகுமரி: கன்னியாகுமரி பேரூராட்சி 18 வார்டுகளை உள்ளடக்கியது. இங்கு கடற்கரை சார்ந்த கிராமங்கள் அதிகளவில் உள்ளன. இங்குள்ள விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர்சிலை, முக்கடல் சங்கமம், பகவதியம்மன் கோயில், சூரியன் உதயம், மறைவு ஆகியவற்றை காண உலகின் பல இடங்களில் இருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக இங்கு 200க்கும் மேற்பட்ட தங்கும் விடுதிகள் உள்ளன. இதில் ஒருசில விடுதிகளில் கழிவுகளை வெளியேற்றும் வசதிகள் முறையாக ஏற்படுத்தவில்லை. ஒரு பிரபல தங்கும் விடுதியின் செப்டிக்டேங்க் கழிவுகள் மற்றும் ஓட்டல் கழிவுகள் ரட்சகர்தெரு வழியாக சென்று கடலில் கலக்கிறது. கழிவுகள் கடலில் கலப்பதால் கடல் மாசுபட்டு மீன்வளம் பாதிக்கப்படுகிறது.
இந்த பகுதி வழியாகத்தான் மீனவர்கள் கடலில் இறங்குவார்கள். மேலும் ஓய்வு நேரத்தில் இந்த இடத்தில் அமர்ந்து தான் வலைகளை கட்டுவார்கள்.

இப்பகுதி மக்கள் அதிகளவில் புழங்கும் இடம் வழியாக கழிவுகள் கொட்டப்படுவதால் கடலில் வளம் கெட்டுப்போவதோடு, பொதுமக்களுக்கும் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது. குறிப்பிட்ட இந்த பகுதியில் யானைக்கால் நோயாளிகள் அதிகளவில் உள்ளனர். சமீப காலத்தில் ஒருசில குழந்தைகள் நோய் பாதிப்பு ஏற்பட்டு என்ன நோய் என தெரியாமலேயே இறந்த சம்பவங்களும் நடந்துள்ளன. இது தொடர்பாக மாவட்ட நிர்வாகத்துக்கும், தமிழக அரசுக்கும் பல்வேறு மனுக்கள் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் கன்னியாகுமரி ஊர் நிர்வாகம் சார்பில் நாளை பேரூராட்சியை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

 இந்த நிலையில் நேற்று வருவாய்த்துறை சார்பில் ஊர் நிர்வாகிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடந்தது. நாகர்கோவிலில் உள்ள அகஸ்தீஸ்வரம் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் அனில்குமார் தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையில் பங்குதந்தை ஜோசப்ரொமால்டு, துணை பங்குதந்தை நாஞ்சில் மைக்கேல் உள்பட உள்பட 30 பேர் அழைக்கப்பட்டனர். இதில் வருவாய் ஆய்வாளர் கணேஷ்குமார், டிஎஸ்பி பாஸ்கரன், பேரூராட்சி இன்ஜினியர் இர்வின் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். பேச்சுவார்த்தையில், வரும் ஜூலை 15ம் தேதிக்குள் லாட்ஜ் கழிவுகள் கடலில் கலப்பதை தடுத்து மாற்று ஏற்பாடுகள் செய்யப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. இதையடுத்து நாளை அறிவிக்கப்பட்டிருந்த முற்றுகை போராட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

Tags : Kanyakumari ,sea mills ,negotiations , Kanyakumari sea, waste, negotiation agreement
× RELATED கன்னியாகுமரி – காரோடு நான்கு...