×

இந்தி மொழியை திணிக்க முயற்சிப்பது, நாட்டின் பன்முகத்தன்மையை சீர்குலைத்துவிடும்: மம்தா பானர்ஜி பேச்சு

கொல்கத்தா: இந்தி மொழியை திணிக்க முயற்சிப்பது என்பது, வேற்றுமையில் ஒற்றுமை என்ற நாட்டின் பன்முகத்தன்மையை சீர்குலைத்துவிடும் என்றும் மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி எச்சரித்திருக்கிறார். மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் பாஜக தலைவர் அமித்ஷா பங்கேற்ற தேர்தல் பரப்புரை பேரணியின் போது வன்முறை ஏற்பட்டது. இந்த கலவரத்தில் ஆர்எஸ்எஸ், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் அடித்துக் கொண்டனர். மேலும் இந்த கலவரத்தின் போது ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் வாகனத்தில் தீ வைத்த வீடியோ ஆதாரங்கள் வெளியாகியுள்ளது. மேலும், வன்முறையின்போது வங்கத்து சீர்திருத்தவாதி ஈஸ்வர சந்திர வித்யாசாகரின் சிலை சேதப்படுத்தப்பட்டது.

தொடர்ந்து வங்கத்தின் தத்துவ மேதை ஈஸ்வர சந்திர வித்யாசாகருக்கு அதே இடத்தில் ஐம்பொன் சிலை அமைக்கப்படும் என பிரச்சாரத்தின் போது பிரதமர் மோடி தெரிவித்தார். இதற்கு பதிலளித்த மம்தா, மேற்கு வங்க அரசிடம் போதுமான  பணம் உள்ளது, நாங்களே அந்த சிலையை அமைப்போம் என கூறியுள்ளார். சிலைகளை உடைப்பது என்பது பாஜகவின் பழக்கம் என குற்றம் சாட்டிய அவர், இங்கு மட்டுமல்லாது திரிபுராவிலும் பாஜகவினர் சிலைகளை உடைத்தனர், தற்போது  ஈஸ்வர சந்திர வித்யாசாகர் சிலையை உடைத்துள்ளனர் என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்நிலையில், சேதப்படுத்தப்பட்ட வங்கத்து சீர்திருத்தவாதி ஈஸ்வர சந்திர வித்யாசாகரின் சிலைக்கு பதிலாக, புதிய சிலை எடுத்து வரப்பட்ட பிரம்மாண்ட ஊர்வலம் மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் நடைபெற்றது.  அதில், அரசியல் கட்சியினர், எழுத்தாளர்கள், வங்க மொழி சினிமா பிரபலங்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முடிவில், கொல்கத்தா வித்யாசாகர் கல்லூரி வளாகத்தில் நிறுவப்பட்ட வித்யாசாகர் சிலைக்கு, மம்தா பானர்ஜி உள்ளிட்டோர்  மலர்தூவி மரியாதை செலுத்தினர். இதனை தொடர்ந்து பேசிய மம்தா பானர்ஜி, தமிழ்நாட்டில் மிகச்சிலரின் தேவைக்கான இந்தி மொழியை, ஏன் அனைவரும் படிக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பினார். இந்தி மொழியை திணிக்க  முயற்சிப்பது என்பது, வேற்றுமையில் ஒற்றுமை என்ற நாட்டின் பன்முகத்தன்மையை சீர்குலைத்துவிடும் என்றும் மம்தா கூறினார். ஒவ்வொரு மாநிலத்திற்கும் சொந்த பாரம்பரியம் மற்றும் மொழி உண்டு.இது நம் இந்தியா, ஆனால், மாநிலத்தின் தலைவிதியை பிஜேபி முடிவு செய்யாது என்றார்.


Tags : country ,Mamata Banerjee , Hindi language, Mamata Banerjee speech
× RELATED ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் கொண்டு வரப்படும்: பா.ஜ.க. தேர்தல் வாக்குறுதி!