×

கன்னியாகுமரியில் கடல் சீற்றம்

கன்னியாகுமரி: குமரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவ மழை தீவிரம் அடைந்து வருகிறது. இதையடுத்து கடந்த 3 நாட்களாக கனத்த மழையும் பெய்து வருகிறது. வானம் மேக மூட்டத்துடன் காணப்படுகிறது. கடந்த பல நாட்களாக மாவட்டத்தில் நிலவி வந்த கடும் கோடை வெப்பம் குறைந்து தற்போது குளுகுளு சீசன் தொடங்கி உள்ளது.இந்த நிலையில் சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியிலும் இன்று காலை கார் மேகங்கள் சூழ்ந்தன. மேலும் மழை பெய்யும் சூழல் காணப்பட்டது. இதே போல கன்னியாகுமரியில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. அலைகள் ஆக்ரோஷமாக எழுந்து கரையில் மோதி திரும்புகின்றன.

கடலோர பாதுகாப்பு குழும போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் கடலில் குளிக்க அனுமதிக்கப்படவில்லை. கடல் சீற்றமாக காணப்பட்டாலும், பூம்புகார் போக்குவரத்து கழகம் சார்பில் விவேகானந்தர் நினைவு பாறைக்கு மட்டும் படகுகள் இயக்கப்பட்டு வருகின்றன. திருவள்ளுவர்சிலைக்கு படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. குளச்சலில் நேற்று கடல் சீற்றம் அதிகமாக இருந்தது. அதே வேளையில் இன்று காலை கடல் சீற்றம் குறைந்து காணப்பட்டது. இதனால் மீனவர்கள் படகுகளில் மீன்பிடிக்க ெசன்றனர். நித்திரவிளை பகுதியில் இன்று கடல் சீற்றம் காணப்படவில்லை.

Tags : Kanyakumari , Kanyakumari, sea furious
× RELATED கன்னியாகுமரி மாவட்டத்தில் விசைப்படகு...