×

ஒடிசா மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும்: பிரதமர் மோடியை சந்தித்து நவீன் பட்நாயக் கோரிக்கை

டெல்லி: புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட ஒடிசா மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என பிரதமர் மோடியிடம் அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக் வலியுறுத்தியுள்ளார். ஃபானி புயல் கடந்த மே 3-ம் தேதி ஒடிசாவை  சூறையாடியது. புயல் கரையை கடந்தபோது பலத்த காற்றுடன் கனமழை பெய்ததால் ஆயிரக்கணக்கான மரங்கள், மின் கம்பங்கள் சாய்ந்தன. கடலோர மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. ஃபானி புயலின்போது 38 பேர் ஒடிசாவில்  பலியாகினர். ஆயிரக்கணக்கான மக்கள் தண்ணீர், மின்சாரம் போன்ற அடிப்படை வசதியின்றி பரிதவித்து வருகின்றனர். ஃபானி புயலால் பாதிக்கப்பட்ட இடங்களில் மீட்பு பணிகள் முடிவடைந்தது. இந்நிலையில், பிரதமர் மோடி கடந்த 6-ம் தேதி   ஃபானி புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஹெலிகாப்டரில் சென்றவாறு ஆய்வு செய்தார்.

அவருடன் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் , மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆகியோர் உடன் இருந்தனர். புயல் பாதிப்புகளை பார்வையிட்ட பின் செய்தியாளர்களை சந்தித்த மோடி கூறியதாவது: ஃபானி புயலால் பாதிக்கப்பட்டுள்ள  ஒடிசா மாநிலத்திற்கு மத்திய அரசின் புயல் நிவாரண நிதியில் இருந்து மேலும் ரூ.1000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ரூ.381 கோடியை  புயல் நிவாரணத்துக்காக ஒடிசா அரசுக்கு மத்திய அரசு ஒதுக்கியிருந்தது.  ஃபானி புயலின் போது  மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே தகவல் பரிமாற்றம் சிறப்பாக இருந்தது. ஃபானி புயலின் நகர்வுகளை நானும் தொடர்ந்து கண்காணித்து வந்தேன். ஒடிசா அரசின் அறிவுரைகளை மக்கள் அலட்சியப்படுத்தாமல் பின்பற்றியதால் உயிர்ச்சேதம்  பெருவாரியாக தவிர்க்கப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையே, நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி 353 இடங்களில் வெற்றிப்பெற்று 2-வது முறையாக நரேந்திர மோடி பிரதமராக பதிவியேற்றார். இந்நிலையில், டெல்லியுள்ள பிரதமர் இல்லத்தில் பிரதமர் நரேந்திர  மோடியை ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக் சந்தித்து பேசினார். ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக், டெல்லியிலுள்ள இல்லத்தில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களை பேட்டியளித்த நவீன் பட்நாயக் ,இந்த  சந்திப்பின் போது பாஜகவின் தேர்தல் வெற்றிக்கு பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்ததாகக் கூறினார். மேலும் புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட ஒடிசா மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என பிரதமர் மோடியை  வலியுறுத்தியதாகவும் தெரிவித்தார். இதே போல் அருணாச்சல பிரதேச ஆளுநர், ஓய்வு பெற்ற பிரிகேடியர் பி.டி.மிஸ்ரா மற்றும் கர்நாடக மாநில ஆளுநர் வஜுபாய் வாலா ஆகியோரும் பிரதமர் மோடியை சந்தித்தனர்.

Tags : Odisha ,Modi ,Naveen Patnaik , Odisha State, Special Status, Prime Minister Modi, Naveen Patnaik, Request
× RELATED ஒடிசாவில் கடும் வெப்ப அலை; பள்ளிகளுக்கு 3 நாள் விடுமுறை