திருச்சியில் தனியார் பள்ளியின் மாடியில் இருந்து விழுந்த மாணவி பலி: உறவினர்கள் போராட்டம்

திருச்சி: திருச்சி உறையூர் பகுதியில் உள்ள  மேதோடிஸ்ட் பள்ளியின் 2வது மாடியில் இருந்து கடந்த வெள்ளி அன்று தவறி விழுந்த 7ம் வகுப்பு மாணவி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து ஆசிரியர்களின் அஜாக்கிரதை காரணமாக மாணவி உயிரிழந்ததாக கூறி மாணவியின் உறவினர்கள் பள்ளியை முற்றுகை இட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். திருச்சியை சேர்ந்தவர் ராம்குமார், அவருடைய மனைவி சங்கீதா. இந்த தம்பதிகளுக்கு 11 வயது இலக்கியா என்ற மகள் இருந்துள்ளார். மேலும் அந்த மாணவி திருச்சி உறையூர் பகுதியில் உள்ள  மேதோடிஸ்ட் பள்ளியில் பயின்று வந்துள்ளார். அம்மாணவியின் வகுப்பானது பள்ளியின் 2வது மாடியில் இருந்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை அன்று இலக்கியா பள்ளி நேரத்தில் தன்னுடைய தோழிகளுடன் விளையாடி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

அப்போது எதிர்பாராத விதமாக 2வது மாடியில் இருந்து இலக்கியா தவறி கீழே விழுந்துள்ளார். கீழே விழுந்து மூச்சு வாங்கிய இலக்கியாவை பள்ளி ஆசிரியர்கள் அலுவலகத்திற்கு அழைத்து சென்று ஆசுவாசபடுத்தியுள்ளனர். பின்பு பெற்றோர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு வந்த பெற்றோர்கள் இலக்கியாவை ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால் அங்கு சிகிச்சை அளிக்க முடியாத காரணத்தால், மாணவியை திருச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் கடந்த 7ம் தேதியில் இருந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்துள்ளது. இதையடுத்து அவர் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்துள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள உறையூர் போலீசார் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் ஆசிரியர்களின் அஜாக்கிரதையின் காரணமாகவே மாணவி உயிரிழந்ததாக கூறி மாணவியின் உறவினர்கள் உறையூர் பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுடன் போலீசார் சமாதான பேச்சு வார்த்தை நடத்தி சாலை மறியலை கைவிட செய்தனர். இருப்பினும் அவர்கள் அங்கிருந்து நேராக பள்ளி வாயிலில் அமர்ந்து தற்போது தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவம் நடைபெறுவதற்கு காரணமான பள்ளி நிர்வாகத்தின் மீதும் ஆசிரியர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்து முற்றுகை இட்டு வருகின்றனர். மேலும் பள்ளி மாணவி இறந்த சம்பவம் தற்போது திருச்சியில் சோகத்தை ஏற்படுத்தி வருகின்றது.

Tags : teacher ,private school floor ,relatives ,Trichy , Trichy, private school, floor, bottom, fallen, student, kills, relatives, fight
× RELATED திருச்சி கல்லூரியில் மோதல் அரசு...