×

உலகக்கோப்பையில் இருந்து விலகிய ஷிகர் தவான் : தொடக்க வீரராக கே.எல்.ராகுல் களமிறங்க வாய்ப்பு

லண்டன்: உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இருந்து காயம் காரணமாக இந்திய வீரர் ஷிகர் தவான் விலகியுள்ளார். தவான் விலகியது இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காயம் காரணமாக 3 வாரங்கள் ஷிகர் தவான் ஓய்வு எடுக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தலை அடுத்து உலகக்கோப்பை தொடரில் இருந்து அவர் விலகியுள்ளார்.  ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் லண்டன் ஓவல் மைதானத்தில் நேற்று முன்தினம் நடந்த போட்டியில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 352 ரன்களை குவித்தது.

ஓபனர்களில் ஷிகர் தவான், ஆஸி. பந்துவீச்சை அருமையாக சமாளித்து சதம் (117 ரன்கள்) அடித்தார். ரோஹித் ஷர்மா 57 ரன்கள் எடுத்தார். இருவரும் முதல் விக்கெட்டுக்கு 22 ஓவர்களில் 127 ரன்களை குவித்து நல்ல அடித்தளம் அமைத்துக் கொடுத்தனர். தொடர்ந்து விராத் கோஹ்லி 82 ரன்கள், ஹர்திக் பாண்டியா 48 ரன்கள், டோனி 27 ரன்கள் என டாப் ஆர்டர் மற்றும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மென்கள் அனைவரும் ஜொலித்தனர்.

353 ரன்கள் என்ற கடின இலக்கை துரத்திய ஆஸ்திரேலிய அணியின் பேட்ஸ்மென்களும் கடுமையாக போராடினர். 50 ஓவர்களில் 316 ரன்கள் என வெற்றிக்கு அருகில் எட்டி விட்டனர். இந்திய அணியின் பவுலர்களும் விட்டுக் கொடுக்காமல் போராட, 36 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸி. அணி தோல்வியடைந்தது. ஆட்டநாயகன் விருது தவானுக்கு வழங்கப்பட்டது.

இந்நிலையில் இந்திய அணியின் பேட்டிங்கின் போது தவானுக்கு கையில் காயம் ஏற்பட்டது. இதனையடுத்து அவர் பீல்டிங் கூட செய்ய வரவில்லை. இதனையடுத்து அவருக்கு இன்று மருத்துவர்கள் சோதனை நடத்தினர். அதில் தவான் 3 வாரங்கள் ஓய்வெடுக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தினர். இதனையடுத்து உலககோப்பை தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இதனையடுத்து நாளை மறுநாள் நடைபெற உள்ள நியூசிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் தொடக்க வீரராக கே.எல்.ராகுல் களமிறங்க வாய்ப்பு உள்ளது.


Tags : Shikhar Dhawan ,K.L. ,World Cup , World Cup, cricket match, Shiger Dhawan, injury, K.L.Rahul
× RELATED டி20 உலக கோப்பை தொடர் ஒத்திவைப்பு: ஐசிசி அறிவிப்பு