×

சாரல் மழைக்கே சகதியாக மாறிய கல்லணை பள்ளி சாலை

நெல்லை: நெல்லையில் பெய்த சிறிய சாரல் மழையால் கல்லணை பள்ளி சாலை சகதிகாடாக மாறியது. இதனால் மாணவிகள் புத்தக மூட்டையை சுமந்தபடி திகிலுடன் கடந்தனர். நெல்லை டவுன் ஆர்ச் அருகே தொடங்கி இணைப்பு சாலை மற்றும் கல்லணை பள்ளி சாலையில் குடிநீர் குழாய் பதிக்கும் பணி கடந்த ஒரு மாதமாக நடக்கிறது. இதன் காரணமாக இந்த சாலையில் கனரக வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இங்குள்ள கல்லணைப்பள்ளி மற்றும் அரசு ஜவகர் உயர்நிலைப்பள்ளி உள்ள பகுதியில் சாலைகள், பாலம் உடைக்கப்பட்டு கிடக்கிறது. நடக்க முடியாத நிலையில் சாலை இருந்தது. கடந்த 3ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டபோது மேடுபள்ளங்களில் மாணவிகள் தட்டுத்தடுமாறி சென்றனர். பின்னர் தாசில்தார் மற்றும் அலுவலர்கள் பார்வையிட்டு மாணவிகள் நடந்து செல்ல தற்காலிக பாதை அமைத்து கொடுத்தனர். இந்த பாதையும் சில இடங்களில் குறுகலானதாக உள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு தொடங்கி நேற்று காலை வரை நெல்லையில் மெல்லிய சாரல் மழை பெய்தது.

இந்த மழைக்கு மண் நிறைந்த கல்லணைப்பள்ளி சாலை முழுவதும் சகதி காடாக மாறியது. காலை ஊன்றினால் வழுக்கும் அளவிற்கு சில பகுதிகளில் சகதியாக இருந்தது. இதனால் பள்ளிக்கு புத்தக பையுடன் வந்த மாணவிகள் ஸ்கேட்டிங் மைதானம் போல் மாறிய இந்த சகதி சாலையில் தட்டுத்தடுமாறி திகிலுடன் கடந்து சென்றனர். சில வழுக்கலான இடங்களில் மாணவிகள் ஒருவரை ஒருவர் உதவிக்கு பிடித்துகொண்டு கடந்து சென்றனர். மேலும் பள்ளி முன் உள்ள குப்பை தொட்டி நிரம்பி சாலைகளில் சிதறி கிடந்த குப்பையால் துர்வாடை வீசி கூடுதல் தொல்லையை கொடுத்தது. இதுபோல் மாலையில் திரும்பிச் செல்லும்போதும் அவதியடைந்தனர். மாணவிகள் மட்டுமின்றி அப்பகுதியை கடந்த ஆசிரியைகள், பொதுமக்கள், முதியவர்களும் நடந்து செல்லமுடியாமல் திணறினர். பைக்கில் சென்றவர்கள் வழுக்கியபடி பயணித்தனர். தொடர்ந்து தென்மேற்கு பருவமழை பெய்ய வாய்ப்புள்ளதால் வரும் நாட்களில் எப்படி செல்வது என மாணவிகளும் பொதுமக்களும் திகைப்பில் உள்ளனர். எனவே சாலையில் சகதி, நீர் தேங்குவதை தடுக்க தற்காலிக மாற்று ஏற்பாடுகளை உடனடியாக அதிகாரிகள் மேற்கொள்ளவேண்டும் என அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags : school road ,Kallanai ,Shalal , Rain, road
× RELATED துறையூர் நகரில் வேட்பாளர் அருண்நேரு ரோடு ஷோ