×

ஏரி வாய்க்காலை ஆக்கிரமித்து ஆதித்யா பள்ளி அட்டூழியம்... புதுவை அரசுக்கு குவியும் புகார் மனுக்கள்

வில்லியனூர்: பொறையூர் பகுதியில் ஆதித்யா பள்ளி கட்டப்பட்டுள்ளது. திறந்தவெளியில் விடப்படும் கழிவுகளால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இப்பள்ளி மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள், புதுவை அரசு கோரிக்கை மனுக்களை அனுப்பி
உள்ளனர்.

புதுவை அரசுக்கு பொறையூர் பகுதி பொதுமக்கள் ஏராளமான பரபரப்பு புகார் மனுக்களை அனுப்பி உள்ளனர். அதில், புதுச்ேசரி வில்லியனூர் அடுத்த பொறையூர் பகுதியில் ஆதித்யா உண்டு உறைவிடப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு பெரும்பாலும் வெளி மாவட்டம் மற்றும் மாநிலங்களை சேர்ந்த மாணவர்கள் தான் படிக்கின்றனர். கிராமப்புறத்தில் இயங்கி வரும் இப்பள்ளியில் அதிக பணம் வசூலிப்பதால் அதனை கிராமப்புற மாணவர்களால் செலுத்த முடியவில்லை. மேலும், அரசு நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட அதிகளவு கட்டணத்தை நிர்ணயம் செய்து வசூல் வேட்டை நடத்தி வருகின்றது. அதனை மறைக்கும் வகையில் டியூஷன் பீஸ் என்ற பெயரில் வசூலிக்கின்றனர். மேலும், கிராமப்புற மாணவர்களுக்கு ஒதுக்க வேண்டிய 25 சதவீத இடஒதுக்கீட்டை வழங்காமல் தொடர்ந்து புறக்கணித்து வருகிறது.

இது அரசியல் பின்புலம் கொண்ட பெரிய கல்வி நிறுவனம் என்பதால் கேள்வி கேட்கும் மக்கள் விரட்டி அடிக்கப்படுகின்றனர். நாங்கள் சொல்வது தான் சட்டம், பணம் இருந்தால் தான் அட்மிஷன், இல்லையென்றால் கிளம்புங்கள் என அரசின் விதிகளையெல்லாம் காலில் போட்டு பள்ளி நிர்வாகம் மிதித்து வருகிறது. கிராமப்புற பள்ளி என்று அரசின் சலுகைகளை பெற்றுக்கொண்டு கிராமப்புற மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்காமல் பணத்திற்கு முன்னுரிமை வழங்கி வருகிறது. இதனால் 10, 12ம் வகுப்பு நீட், ஜெஇஇ, ஜிப்மர், உள்ளிட்ட பொதுத்தேர்வுகளில் வெளிமாநில மாணவர்கள் அதிகளவில் தேர்ச்சி பெறுகின்றனர். மேலும், ஊசுட்டேரியில் இருந்து விவசாய பாசனத்திற்கு பொறையூர், உளவாய்க்கால் வழியாக தண்ணீர் செல்லும் வாய்க்காலை ஆக்கிரமித்து இப்பள்ளியை கட்டியுள்ளனர். இதனால் மழை காலங்களில் தண்ணீர் வடியாமல் விவசாய நிலங்களில் தேங்கி பயிர்கள் அனைத்தும் சேதமடைகிறது. மேலும், ஏரி வாய்க்காலை கழிவு நீர் செல்லும் வாய்க்காலாக மாற்றி அட்டூழியம் செய்து வருகின்றனர்.

இப்பள்ளி வளாகத்தில் வளர்க்கப்படும் கால்நடைகளின் கழிவுகள் மற்றும் மனித கழிவுகள் திறந்தவெளியில் விடப்படுகிறது. இதனால் பள்ளியின் உள்ளே துர்நாற்றம் வீசுவதால், குழந்தைகளுக்கு தொற்று நோய்கள் பரவுகிறது. இதனால் அப்பகுதி குழந்தைகள் தினம் தினம் அவதி அடைகின்றனர். இதனை உணராத சிலர் பெரிய கல்வி நிறுவனம் என்பதால் கவுரவத்துக்கு தங்கள் பிள்ளைகளை இங்கு சேர்க்கின்றனர். பள்ளியை சுற்றியுள்ள அரசு நிலங்களை ஆக்கிரமித்து வேலி அமைக்கப்பட்டுள்ளது. இதனால் சாலையின் அளவு குறுகி போய் உள்ளது. பள்ளிக்கு வருபவர்களின் பைக், கார் நிறுத்த பார்க்கிங் வசதி இல்லாததால், வாகனங்களை சாலையோரத்தில் நிறுத்திவிட்டு செல்கின்றனர். இதனால் காலை, மாலை நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அந்த சமயங்களில் பொதுமக்கள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர். அரும்பார்த்தபுரம் மேம்பால கட்டுமான பணிகள் நடந்து வருவதால் புதுச்சேரி நகரப்பகுதிக்கு செல்லும் வாகனங்கள், ஆம்புலன்ஸ் போன்ற அவசர ஊர்திகள் பெரும்பாலும் இந்த சாலை வழியாகவே செல்கின்றன. அப்போது பள்ளியின் நிர்வாக அலட்சியத்தால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன் ஆம்புலன்ஸ் கூட செல்ல முடிவதில்லை. இதுபோன்ற அவலநிலைகள் ஆதித்யா பள்ளியால் நடந்து வருவது தெரிந்தும் சுற்றுச்சூழல், போக்குவரத்து, பொதுப்பணி ஆகிய துறைகளை சேர்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டி வருகின்றனர். இப்பள்ளியில் நடக்கும் அவலங்கள், ஆக்கிரமிப்புகள் குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க முதல்வர் உத்தரவிட வேண்டும். இவ்வாறு அந்த புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பள்ளி நிர்வாகத்தை கண்டு அப்பகுதி மக்கள் வெகுண்டெழுந்தது புதுவை அரசுக்கு தலைவலியை ஏற்படுத்தி உள்ளது.

கிரண்பேடி கண்காணிப்பாரா? ஏங்கி காத்துக்கிடக்கும் மக்கள்

ஒவ்வொரு சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் புதுவை முழுவதும் விசிட் அடிக்கும் கிரண்பேடி, இப்பள்ளியை ஆய்வு நடத்தி ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் கூறும்போது, புதுவை கவர்னர் கிரண்பேடி பொறுப்பேற்றது முதல் புகார் மனுக்கள் வந்தால் உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கும் குணம் கொண்டவர். ஆனால் புதுச்சேரியின் பிரதான ஏரியான ஊசுட்ேடரிக்கு தண்ணீர் வரும் வாய்க்காலை ஆக்கிரமித்து கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை உடனடியாக ஆய்வு ெசய்ய வேண்டும். பார்க்கிங் வசதி இல்லாததால் புதுவையில் பிரபல ஜவுளிக்கடையை மூடி சீல் வைத்த கவர்னர் இப்பள்ளியை ஆய்வு நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இது சம்பந்தமாக அப்பகுதி மக்கள் கவர்னர் கிரண்பேடியை சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Tags : Aditya ,school atrocity ,lake , Aditya School, Puduvai
× RELATED வல்லவன் வகுத்ததடா விமர்சனம்