×

விடுமுறையில் ஊருக்கு வந்து சமூக பணி... நாகர்கோவில் அண்ணா ஸ்டேடியத்தை சுத்தம் செய்த ராணுவ வீரர்கள்

நாகர்கோவில்: விடுமுறையில் ஊருக்கு வந்து சமூக பணிகள் செய்து வரும் குமரி மாவட்ட ராணுவ வீரர்களை கலெக்டர், எஸ்.பி. நேரில் சந்தித்து பாராட்டு தெரிவித்தனர். ராணுவம், எல்லை பாதுகாப்பு படை உள்பட நாட்டின் பாதுகாப்பு படை பிரிவுகளில் பணியாற்றும் குமரி மாவட்டத்தை சேர்ந்த வீரர்கள் ஒருங்கிணைந்து ‘கன்னியாகுமரி ஜவான்ஸ்’ என்ற புதிய அமைப்பை ஏற்படுத்தி உள்ளனர். தற்போது இந்த அமைப்பில் 3,500 பேர் உள்ளனர். இவர்களில் விடுமுறைக்கு ஊருக்கு வருபவர்கள் குமரி மாவட்டத்தில் பல்வேறு சமூக பணிகளை செய்து வருகின்றனர். மேலும் ரத்ததானமும் வழங்கி வருகின்றனர்.

இதன் ஒரு கட்டமாக சமீபத்தில் விடுமுறையில் ஊருக்கு வந்துள்ள வீரர்கள் ஒருங்கிணைந்து, நாகர்கோவில் அண்ணா ஸ்டேடியத்தை சீரமைக்க முடிவு செய்தனர். இதற்காக அவர்கள் மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி கோரி இருந்தனர். அதன்படி நேற்று ராணுவ வீரர்கள் ஒருங்கிணைந்து கொட்டும் மழையை கூட பொருட்படுத்தால் ஸ்டேடியத்தில் இருந்த புல், புதர்களை அகற்றினர். மழை நீர் தேங்காத வண்ணம் மண் நிரப்புதல் உள்ளிட்ட பணிகளையும் செய்தனர். மேலும் புதிய மரக்கன்றுகளையும் நட்டனர். இவர்களின் பணியை கலெக்டர் பிரசாந்த் எம்.வடநேரே, எஸ்.பி.நாத் ஆகியோர் நேரில் வந்து பாராட்டினர். மேலும் அவர்களும் ஸ்டேடியத்தில் மரக்கன்றுகளை நட்டதோடு, ராணுவ வீரர்களுடன்புகைப்படமும் எடுத்து கொண்டனர். பின்னர் கலெக்டர் பிரசாந்த் எம்.வடநேரே நிருபர்களிடம் கூறுகையில், ராணுவ வீரர்கள் செய்து வரும் சமூக பணிக்கு எனது சார்பிலும், மாவட்ட நிர்வாகம் சார்பிலும் பாராட்டுக்களை ெதரிவித்து கொள்கிறேன். இதுபோன்ற பணிகளுக்கு தேவையான உதவிகளை மாவட்ட நிர்வாகம் செய்து கொடுக்கும். சமூகபணி மட்டுமின்றி இயற்கை பேரிடர் காலங்களிலும் ராணுவ வீரர்களின் பணி மிகவும் செம்மையானது. அவர்களது உதவி நமக்கு எல்லா நேரங்களிலும் தேவை என்றார். ஏ.எஸ்.பி. ஜவகர், விளையாட்டு அதிகாரி டேவிட் டேனியல் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

இது பற்றி ராணுவ வீரர்கள் கூறுகையில், குமரி மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்கள் ராணுவம் உள்ளிட்ட பல்வேறு விதமான பாதுகாப்பு படை பிரிவுகளில் உள்ளோம். நாங்கள் இணைந்து உருவாக்கி உள்ள கன்னியாகுமரி ஜவான்ஸ் அமைப்பு மூலம் சுத்தம் மற்றும் பசுமை என்பதை அடிப்படையாக கொண்டு பல்வேறு இடங்களில் பஸ் நிறுத்தங்களை சுத்தப்படுத்தி மரக்கன்று நட்டுள்ளோம். ரத்ததானமும் வழங்குகிறோம். ஒரு குழுவினர் விடுமுறை முடிந்து சென்றவுடன், அடுத்த குழுவினர் விடுமுறைக்கு வந்து இந்த பணியை தொடர்வார்கள். ஓய்வு பெற்றவர்களும் இதில் உள்ளனர். விடுமுறையில் யார் இருக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ளவே தனி வாட்ஸ் அப் குரூப் வைத்து உள்ளோம். எங்களை போன்று இப்போது மற்ற மாவட்டங்கள், மாநிலங்களில் உள்ளவர்களும் ஒருங்கிணைந்து அவர்கள் பகுதிகளில் இது போன்ற பணிகளை செய்கிறார்கள் என்றனர்.

Tags : soldiers ,vacation ,town ,Nagercoil Anna Stadium , Military personnel, social work
× RELATED மண்டபம் அருகே பறக்கும் படையினர் தீவிர சோதனை