×

கணவருடன் சேர்த்து வைக்ககோரி தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் மகளுடன் முதல் மனைவி தர்ணா

தஞ்சை: இரண்டாம் திருமணம் செய்து கொண்ட கணவருடன் சேர்த்து வைக்ககோரி தஞ்சை கலெக்டர் அலுவலக வளாகத்தில் மகளுடன் முதல் மனைவி தர்ணா போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள காடுவெட்டி விடுதி பள்ளத்தான் மனை பகுதியை சேர்ந்தவர் சிவசாமி. இவரது மகள் பாண்டிசெல்வி (25). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த லெனின் என்பவருக்கும் 2013ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. வெளிநாட்டில் லெனின் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில், பாண்டிச்செல்வி தனது மகளுடன் கணவர் வீட்டில் வசித்து வந்தார். அதே வீட்டில் லெனினின் தங்கை நளினி, இவரது கணவர் கண்ணன் மற்றும் மாமியார் வசித்து வந்தனர். இதற்கிடையே ஒருநாள் நளினியின் கணவர் கண்ணன், பாண்டிசெல்வியின் தங்கையிடம் தகாத முறையில் நடந்து கொண்டார். இதனால் பாண்டிசெல்விக்கும், லெனினின் குடும்பத்தினருக்கும், இடையே தகராறு ஏற்பட்டது. இதைதொடர்ந்து, பாண்டிசெல்வி மற்றும் மகளை பாண்டி செல்வியின் தாய் வீட்டில் விட்டு விட்டனர்.

இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் வெளிநாட்டில் இருந்து சொந்த ஊருக்கு வந்த லெனினுக்கு அவரது குடும்பத்தினர், வேறொரு பெண்ணை 2வது திருமணம் செய்து வைத்தனர். இதுகுறித்து பாண்டிசெல்விக்கு தெரியவந்ததும் பட்டுக்கோட்டை மகளிர் போலீசில் கடந்த மே மாதம் புகார் செய்தார். ஆனால் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நேற்று நடந்தது. இந்த குறைதீர் கூட்டத்தில் மனு கொடுப்பதற்காக தனது மகளுடன் பாண்டிசெல்வி வந்தார். அப்போது, திடீரென கலெக்டர் அலுவலகம் முன்பு 2வது திருமணம் செய்த கணவரை மீட்டுத்தர வேண்டும் என்று கையில் பதாகையை ஏந்தியபடி மகளுடன் தர்ணா போராட்டத்தில் பாண்டிசெல்வி ஈடுபட்டார். தகவலறிந்து போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பாண்டிசெல்வியிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினர். இதையடுத்து கலெக்டர் அலுவலகத்திலிருந்து 2 பேரும் புறப்பட்டு சென்றனர்.

Tags : office ,collector ,Dhana ,Vannagari Tanjore , First wife, Dharna
× RELATED குமரி கலெக்டர் அலுவலக தேர்தல்...