×

பத்திரிக்கையாளர் கைது விவகாரம்... உத்தரபிரதேச யோகி ஆதித்யநாத் அரசுக்கு குட்டு வைத்த உச்சநீதிமன்றம்

புதுடெல்லி: உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் குறித்து அவதூறு வீடியோ பதிவிட்டதாக கைதான பத்திரிகையாளர் பிரசாந்த் கனோஜியாவை உடனடியாக விடுதலை செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உத்தரப் பிரதேச முதல்வர் அலுவலகத்துக்கு வெளியே பெண் ஒருவர், முதல்வர் யோகி ஆதித்யநாத்தை திருமணம் செய்து கொள்ளும் விருப்பத்தை அவருக்கு அனுப்பியதாக ஊடகங்களுக்கு பேட்டி அளித்துள்ளார். இந்த வீடியோ காட்சியை நொய்டாவை சேர்ந்த பத்திரிக்கையாளர் பிரசாந்த் கனோஜியா டிவிட்டர் மற்றும் பேஸ்புக்கில் பகிர்ந்துள்ளார்.

இதனை தொடர்ந்து முதல்வர் யோகி குறித்து அவதூறு செய்தி பரப்பியதாக பிரசாந்த் கனோஜியா மீது லக்னோவில் உள்ள ஹஸ்ரத்கஞ்ச் காவல் நிலையத்தில் கடந்த வெள்ளியன்று வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், கனோஜியாவின்  கைது நடவடிக்கைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவை அவசர மனுவாக விசாரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. இதனிடையே கைது செய்யப்பட்ட கனோஜியாவின் மனைவி ஜகீஷா அரோரா ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்துள்ளார்.

இதனை தொடர்ந்து நீதிபதிகள் இந்திரா பானர்ஜி, அஜய் ரஸ்தோகி, ஆகியோர் அடங்கிய விடுமுறை கால அமர்வு முன் இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது கைதான பத்திரிகையாளர் பிரசாந்த் கனோஜியாவை உடனடியாக விடுதலை செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பத்திரிக்கையாளர் செய்தது கொலைக்குற்றமா? அவதூறு வழக்குக்காக 11 நாட்கள் காவலில் வைப்பீர்களா? என்று கேள்வி எழுப்பியது.

பத்திரிகையாளர் பிரசாந்த் கனோஜியாவை விடுதலை செய்வதற்கு உத்திரபிரதேச அரசு எதிர்ப்பு தெரிவித்தது. அவரை விடுதலை செய்தால் சமூக வலைதளங்களில் அவர் பரப்பிய கருத்து உண்மை என்றாகிவிடும் என்று உச்சநீதிமன்றத்தில் உ.பி. அரசு வாதிட்டது. இதற்கு கடும் ஆட்சேபனை தெரிவித்த உச்சநீதிமன்ற நீதிபதி இந்திரா பானர்ஜி, செய்தியாளர்களை எந்த சட்டப்படி உ.பி. அரசு கைது செய்தது என்று கேள்வி எழுப்பினார்.

கருத்து வேறுபடலாம் ஆனால் அதற்காக கைது செய்வது ஏன் என்று உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளது. விடுதலை செய்தால் பிரசாந்தின் கருத்து எப்படி உண்மையாகும் என்றும் அது அவரது தனிப்பட்ட கருத்தாகவே இருக்கும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. கருத்து தெரிவிக்க அனைவருக்கும் உரிமை உள்ளது என்றும், எதற்கெடுத்தாரலும் கைது செய்வீர்களா என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.


Tags : Journalist ,Supreme Court ,Government ,Yogi Adiithyanath ,Uttar Pradesh , Uttar Pradesh Chief Minister Yogi Adityanath, journalist, defamation case,
× RELATED தேர்தல் பத்திரம் விவகாரம் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல்