காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியின் வீடு காலியாக இருப்பதாக மத்திய அரசு பட்டியல் வெளியீடு...

புதுடெல்லி: டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி வசித்து வரும் வீடு காலியாக இருப்பதாக மத்திய அரசு பட்டியல் வெளியிட்டுள்ளது. மக்களவை தேர்தலில் புதிதாக தேர்வான உறுப்பினர்களுக்கு நாடாளுமன்றம் சார்பில் வீடு ஒதுக்கப்படுவது வழக்கம். அந்த வீடுகளில் இருந்து எம்.பி.க்கள் தமக்கு விருப்பமான ஒன்றை தேர்வு செய்வர். இந்நிலையில் நாடாளுமன்ற அலுவலகம் வெளியிட்டுள்ள காலியாக இருக்கும் 517 வீடுகளின் பட்டியலில் 12 துக்ளக் சாலை என்ற முகவரியில் உள்ள ராகுல்காந்தியின் வீடும் இடம் பெற்றிருக்கிறது.

இது குறித்து ராகுலுக்கு எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. 2004-ம் ஆண்டு முதல் முறையாக அமேதியில் வெற்றி பெற்று மக்களவை உறுப்பினரான போது அவருக்கு ஒதுக்கப்பட்ட வீட்டில் தற்போது வரை வசித்து வருகிறார். அண்மையில் நடந்த தேர்தலில் அமேதியில் தோல்வியடைந்தாலும், வயநாடு தொகுதியில் வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினராக ராகுல்காந்தி நீடிக்கும் நிலையில் வீட்டை காலி செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுத்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


× RELATED தமிழக காங்கிரஸ் சிறுபான்மை துறை...