×

மும்பையில் சூறைக்காற்றுடன் கொட்டிய கனமழை... ரயில் மற்றும் விமான சேவை பாதிப்பு

மும்பை: மராட்டிய தலைநகர் மும்பையில் சூறைக்காற்றுடன் கொட்டிய கனமழையால் ரயில் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. வடக்கு மும்பையில் நேற்று இரவு பல்வேறு இடங்களில் பலத்த காற்று மற்றும் இடி மின்னலுடன் கனமழை பெய்தது. பல இடங்களில் சாலைகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் காற்றில் கீழே விழுந்தது. மும்பை சத்ரபதி சிவாஜி பன்னாட்டு விமான நிலையத்தில் ஓடுதளத்தில் சென்ற விமானம் சேதமடைந்தது.

இதனையடுத்து மோசமான வானிலை காரணமாக மும்பைக்கு வந்த 10-க்கும் அதிகமான விமானங்கள் திருப்பி அனுப்பப்பட்டன. கனமழையின் போது மும்பை கண்டிவாலேயில் உள்ள பொய்சார் என்ற இடத்தில் மின்சாரம் தாக்கி 2 சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

சூறைக்காற்று காரணமாக சாலை போக்குவரத்து துண்டிக்கபட்டதோடு, ரயில் சேவையும் தாமதமாகவே இயங்கியது. தென்மேற்கு பருவமழை நேற்றுமுன்தினம் கேரளாவில் ஆரம்பித்துள்ளது. இந்த மழை படிப்படியாக கர்நாடகா, கோவா, மகாராஷ்டிரா மாநிலங்களுக்கு செல்வது வழக்கம். ஆனால் இம்முறை கேரளாவில் பருவமழை ஆரம்பித்த இரண்டே நாட்களில் மும்பையிலும் மழை கொட்டத் தொடங்கிவிட்டது.

Tags : Mumbai , Mumbai, Heavy Rain, Storm, Rain, Airline Service, Rail Transport
× RELATED ஐபிஎல் தொடர் சட்டவிரோதமாக...