×

மகள் சித்ரவதையால் முதியோர் இல்லத்தில் கட்டாயமாக தங்கவைக்கப்பட்ட பாட்டி விடுவிப்பு

புதுடெல்லி: மகள் சித்ரவதை காரணமாக, முதியோர் இல்லத்தில் வலுக்கட்டாயமாக சேர்க்கப்பட்ட பாட்டியை, அவரின் சகோதரியுடன் செல்ல டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டெல்லியைச் சேர்ந்த 76 வயது பாட்டி ஒருவர் தனது மகள் வீட்டில் வசித்து வந்தார். அவரது மகள் சரியாக சாப்பாடும் கொடுக்காமல், வெளியில் செல்லவும் அனுமதிக்காமல் சித்ரவதை செய்து வந்துள்ளார். பெற்ற தாயை, சொந்த மகளே சித்ரவதை செய்வதை பார்த்த, ஒருவர் இதுகுறித்து போலீசில் கடந்த பிப்ரவரி மாதம் புகார் அளித்தார். இதனால் போலீசார், அந்த மூதாட்டியை மீட்டு, ‘ஹெல்ப்பிங் பிரெய்ன்ஸ்’ என்ற தொண்டு நிறுவனம் நடத்தி வந்த ‘நய் துனியா’ என்ற முதியோர் இல்லத்தில் சேர்த்தனர். ஆனால் அங்கு தங்கியிருக்க அந்த பாட்டிக்கு விருப்பம் இல்லை. இவரை பார்க்க, டாக்டராக இருக்கும் அவரது மூத்த சகோதரி முதியோர் இல்லத்துக்கு வந்தார். தனது தங்கை பரிதாபமான நிலையில் தங்கியிருப்பதை பார்த்து மனவேதனை அடைந்தார். இதனால் முதியோர் இல்ல மானேஜரை அணுகி, தனது தங்கையை, தன்னுடன் அனுப்பி வைக்கும்படி கேட்டுள்ளார். இதற்கு மானேஜர் மறுத்துவிட்டார். இதனால் இதுகுறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. நீதிமன்றத்தை அணுகும்படி போலீசார் தெரிவித்துவிட்டனர்.

இதனால் பாட்டியின் சகோதரி டெல்லி நீதிமன்றத்தில் மனு செய்தார். அதில், ‘‘நான் டாக்டராக இருப்பதால், எனது தங்கையை எனது வீட்டில் வைத்து கவனித்துக் கொள்ள விரும்புகிறேன். இதற்கு முதியோர் இல்லம் மறுப்பு தெரிவிப்பதால், எனது சகோதரியை விடுவிக்க உத்தரவிட வேண்டும்’’ என கூறியிருந்தார். இந்த வழக்கு டெல்லி பெருநகர மாஜிஸ்திரேட் மணீஷ் கருணா கக்கர் முன் விசாரணைக்கு வந்தது. முதியோர் இல்லத்தில் இருந்த பாட்டி கடந்த 7ம் தேதி நீதிமன்றத்துக்கு வரவழைக்கப்பட்டார். தனது டாக்டர் சகோதரி வீட்டில் வசிக்க விரும்புவதாக பாட்டி கூறினார். அவரிடம் மாஜிஸ்திரேட் அவரது வீடு, உறவினர்கள் பற்றி சில கேள்விகள் எழுப்பினார். அதற்கு பாட்டி திருப்திகரமாக பதில் அளித்தார். அவர் நல்ல மனநிலையில் இருப்பது உறுதி செய்யப்பட்டதால், அவர் தனது விருப்பப்படி தனது சகோதரியுடன் செல்ல மாஜிஸ்திரேட் உத்தரவு பிறப்பித்தார்.

Tags : release ,Chitravati ,home , Release of the grandmother, forced to stay ,elderly home
× RELATED தேர்தல் பத்திர எண்களை வெளியிட பாரத...