×

சில்லி பாயின்ட்...

* பயிற்சியின்போது வலது கை விரலில் காயம் அடைந்த இலங்கை வேகப் பந்துவீச்சாளர் நுவன் பிரதீப், வங்கதேசத்துடன் இன்று நடைபெற உள்ள லீக் ஆட்டத்தில் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் முழுவதுமாக குணமடைய ஒரு வாரம் ஆகும் என அணி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* இடது முழங்கால் மூட்டு பகுதியில் காயம் அடைந்த ஆப்கானிஸ்தான் அணி விக்கெட் கீப்பர்/பேட்ஸ்மேன் முகமது ஷாஷத் உலக கோப்பையில் பங்கேற்க மாட்டார் என அறிவிக்கப்பட்ட நிலையில், தான் முழு உடல்தகுதியுடன் உள்ளதாகவும் தனக்கு எதிராக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் சிலர் சதி செய்துள்ளதாகவும் ஷாஷத் குற்றம்சாட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

* இடுப்பு பகுதியில் காயம் அடைந்துள்ள இங்கிலாந்து அணி விக்கெட் கீப்பர்/பேட்ஸ்மேன் ஜோஸ் பட்லர் விரைந்து குணமாகி வருவதாக அறிவித்துள்ள அணி நிர்வாகம், வரும் வெள்ளியன்று வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக நடக்க உள்ள லீக் ஆட்டத்துக்கு முன்பாக அவர் உடல்தகுதியை நிரூபித்தால் மட்டுமே களமிறங்க வாய்ப்பு அளிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

* தோள்பட்டை காயம் காரணமாக அவதிப்பட்டு வந்த ரஷ்ய டென்னிஸ் நட்சத்திரம் மரியா ஷரபோவா, ஜூன் 17ம் தேதி தொடங்கும் மல்லோர்கா ஓபன் தொடரில் களமிறங்குவதை உறுதி செய்துள்ளார். இந்த தொடரில் அவருக்கு ‘வைல்டு கார்டு’ சிறப்பு அனுமதி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

* சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ள யுவராஜ் சிங்குக்கு மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர் விடுத்துள்ள வாழ்த்து ட்வீட்டில் ‘கிரிக்கெட்டுக்கான உங்களின் பங்களிப்பு அனைத்துக்கும் நன்றி’ என்று பதிவிட்டுள்ளார்.

* நேஷன்ஸ் லீக் கால்பந்து போட்டித் தொடரின் பைனலில் நெதர்லாந்து அணியுடன் மோதிய போர்ச்சுகல் அணி 1-0 என்ற கோல் கணக்கில் போராடி வென்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.

Tags : All Sports
× RELATED ஐபிஎல் டி20 கிரிக்கெட்; பெங்களூரு – கொல்கத்தா இன்று மோதல்