×

ஏர்-இந்தியா ஊழல் வழக்கு முன்னாள் அமைச்சர் பிரபுல் படேல் அமலாக்கத்துறையில் நேரில் ஆஜர்

புதுடெல்லி: பலகோடி ரூபாய் பண மோசடி வழக்கு தொடர்பாக முன்னாள் விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் பிரபுல் படேல் டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேற்று ஆஜரானார். காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் விமானப் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர், தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பிரபுல் குமார் படேல். இவரது பதவிக்  காலத்தில் ஏர் இந்தியா பெரும் நஷ்டத்தை சந்தித்தது. இதற்கான காரணங்கள் குறித்து அமலாக்கத்துறை விசாரித்து வந்தது.

இதில், லாபகரமான சர்வதேச வழித்தடங்கள், சாதகமான போக்குவரத்து நேரத்தை தனியார் விமான நிறுவனங்களுக்கு ஏர் இந்தியா நிறுவனம் விட்டுக் கொடுத்ததுதான் காரணம் என தெரிய வந்தது. இதற்காக பிரபுல் படேல் அந்த விமான நிறுனவங்களிடம் இருந்து 272 கோடி ரூபாய் வரை லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்தது. பிரபுல் படேல் தரப்பில் விமான நிறுவனங்களிடம் இடைத்தரகராக செயல்பட்ட தீபக் தல்வார் கடந்த மாதம் துபாயில் இருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தி கொண்டு வரப்பட்டு, பின்னர் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

இதனிடையே இது தொடர்பான விசாரணைக்கு ஜூன் 6ம் தேதி ஆஜராகும்படி, பிரபுல் படேலுக்கு அமலாக்கத்துறை கடந்த 1ம் தேதி சம்மன் அனுப்பியது. இதன்படி, பிரபுல் படேல் டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேற்று காலை 10.30 மணியளவில் ஆஜரானார். அப்போது பண மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் அவரது வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது.

Tags : Praful Patel ,Income Tax Department , Air India-India corruption case, former minister Praful Patel, enforcement department,
× RELATED நயினார் நாகேந்திரனுக்கு கொண்டு சென்ற...